/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ துாத்துக்குடியில் விதிமுறையை மீறும் வின்பாஸ்ட் நிறுவனம் அனுமதியின்றி மண் எடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு துாத்துக்குடியில் விதிமுறையை மீறும் வின்பாஸ்ட் நிறுவனம் அனுமதியின்றி மண் எடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு
துாத்துக்குடியில் விதிமுறையை மீறும் வின்பாஸ்ட் நிறுவனம் அனுமதியின்றி மண் எடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு
துாத்துக்குடியில் விதிமுறையை மீறும் வின்பாஸ்ட் நிறுவனம் அனுமதியின்றி மண் எடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு
துாத்துக்குடியில் விதிமுறையை மீறும் வின்பாஸ்ட் நிறுவனம் அனுமதியின்றி மண் எடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு
ADDED : ஜூன் 23, 2024 04:25 PM

துாத்துக்குடி: வியட்நாம் நாட்டைச் சேர்ந்த, 'வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட்' என்ற நிறுவனம், தமிழகத்தில் தொழில் தொடங்க முடிவு செய்தது. இதையடுத்து, 16,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக, அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. முதல் கட்டமாக 4,000 கோடியில், மின்சார கார், பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை துாத்துக்குடியில் தொடங்குவதாக அறிவித்தது.
தொடர்ந்து, தமிழக அரசு, துாத்துக்குடி சில்லாநத்தம் கிராமத்தில், சிப்காட் -2 தொழில் பூங்கா வளாகத்தில், 406.57 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கியது.
இதையடுத்து, துாத்துக்குடியில் பிப்., 25ல் நடந்த நிகழ்ச்சியில், வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது, ஆலைக்கான கட்டுமான பணி நடக்கிறது.
வின்பாஸ்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கட்டுமானப் பணிகளுக்காக, விதிமுறைகளை மீறி, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சரள் மண் அள்ளப்படுகிறது.
பட்டா நிலமாக இருந்தாலும், அதில் மண் எடுக்க கனிம வளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், தொழில் நிறுவனம் தொடங்க ஒதுக்கப்பட்ட நிலத்தில், வின்பாஸ்ட் நிறுவனம் விதிமுறையை மீறி, சரள் மண் எடுத்து வருவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் கூறியதாவது: வின்பாஸ்ட் கார் உற்பத்தி நிறுவனம், 4,000 கோடி ரூபாய் மதிப்பில் 3,500 பேருக்கு வேலை தரும் வகையில், துாத்துக்குடிக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. ஆனால், அரசின் எந்தவித அனுமதியும் இல்லாமல், வின்பாஸ்ட் தொழிற்சாலை கட்டுமான பணிக்காகவும், நிலங்களை சமன்படுத்தவும் சரள் மண் எடுக்கப்படுகிறது.
சரள் மண் எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகத்திடமும், கனிம வளத்துறையிடமும் எவ்வித முன்அனுமதியை இந்த நிறுவனம் பெறவில்லை. இரவு, பகல் என, 10க்கும் மேற்பட்ட இயந்திரங்களால் நுாற்றுக்கணக்கான லாரிகளில், 15 ஏக்கரில் சரள் மண் கொள்ளையை அந்த நிறுவனம் நடத்தி வருகிறது. 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மண் அள்ளப்படுகிறது.
சரள் மண் கொள்ளையை தடுக்க கனிம வளத்துறையோ, தாசில்தாரோ முன்வராமல் பாராமுகமாக இருக்கின்றனர். இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய ராயல்டி, கனிம கட்டணம் என பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, 2009ல் துாத்துக்குடி துறைமுக நிர்வாகம் எந்தவித அனுமதியும் இல்லாமல் மண் எடுத்தது. அப்போதைய கலெக்டர் பிரகாஷ் உடனடியாக ஆய்வு செய்தார். விதிமுறையை மீறி செயல்பட்ட துறைமுக நிர்வாகத்துக்கு, அவர் 1.77 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.
அதேபோல, தற்போதும் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.