/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கார் மோதி 3 பெண்கள் பலி * குழாயில் தண்ணீர் பிடித்தபோது பரிதாபம் கார் மோதி 3 பெண்கள் பலி * குழாயில் தண்ணீர் பிடித்தபோது பரிதாபம்
கார் மோதி 3 பெண்கள் பலி * குழாயில் தண்ணீர் பிடித்தபோது பரிதாபம்
கார் மோதி 3 பெண்கள் பலி * குழாயில் தண்ணீர் பிடித்தபோது பரிதாபம்
கார் மோதி 3 பெண்கள் பலி * குழாயில் தண்ணீர் பிடித்தபோது பரிதாபம்
ADDED : ஜூன் 23, 2024 04:28 PM

துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து திருச்செந்துார் சாலையில் அமைந்துள்ளது முக்காணி. இங்கு, சாலையோரத்தில் இருந்த குடிநீர் குழாயில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை 6.30 மணிக்கு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த 'இன்னோவா' கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற பெண்கள் மீது மோதியது.
இதில், அப்பகுதியை சேர்ந்த நட்டார் சாந்தி, 50, பார்வதி, 35, அமராவதி, 58, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சண்முகத்தாய் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆத்துார் போலீசார் உயிரிழந்த மூன்று பெண்களின் உடல்களை மீட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த மணிகண்டன், 27, என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
முக்காணி பகுதியில் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. போதிய வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. எனவே, தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:
பெருங்குளத்தை சேர்ந்த மொபைல் போன் கடை உரிமையாளரான மணிகண்டன், 27, பெங்களூரு சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். அதன் பிறகு காரில் அவர் ஊர் திரும்பி கொண்டிருந்த போது, அசதியில் துாங்கி விட்டார். அதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மோதியது. இதில், அவர்கள் இறந்தனர்.
இவ்வாறு கூறினர்.
இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கும் தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சண்முகத்தாய்க்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தில், நான்கு வளைவுகளுடன் கூடிய தடுப்பு வேலி அமைக்கவும், வேகத்தடை அமைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர்.