/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அத்திப்பட்டு மேம்பாலம் அணுகு சாலை பணிகளில்...இழுபறி!:நான்கு ஆண்டுகளாக 20 கிராமங்கள் பரிதவிப்புஅத்திப்பட்டு மேம்பாலம் அணுகு சாலை பணிகளில்...இழுபறி!:நான்கு ஆண்டுகளாக 20 கிராமங்கள் பரிதவிப்பு
அத்திப்பட்டு மேம்பாலம் அணுகு சாலை பணிகளில்...இழுபறி!:நான்கு ஆண்டுகளாக 20 கிராமங்கள் பரிதவிப்பு
அத்திப்பட்டு மேம்பாலம் அணுகு சாலை பணிகளில்...இழுபறி!:நான்கு ஆண்டுகளாக 20 கிராமங்கள் பரிதவிப்பு
அத்திப்பட்டு மேம்பாலம் அணுகு சாலை பணிகளில்...இழுபறி!:நான்கு ஆண்டுகளாக 20 கிராமங்கள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 02, 2024 12:52 AM

மீஞ்சூர்:நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், ரயில்வே மேம்பாலம் அமைந்தும், அணுகு சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், அத்திப்பட்டு - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி., 14 ரயில்வே கேட் உள்ளது.
நந்தியம்பாக்கம், கொள்ளட்டி, தமிழ்கொரஞ்சூர், மவுத்தம்பேடு, செப்பாக்கம், கொரஞ்சூர் ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட, 20 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம், தொழில் ஆகியவற்றிற்காக மீஞ்சூர், பொன்னேரி மற்றும் சென்னைக்கு செல்ல இந்த ரயில்வே கேட் வழியாக பயணிக்கின்றனர்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, 2018ல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 36 கோடி ரூபாயில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே எல்லையில் துாண்கள் அமைத்து, அதன்மீது ஓடுபாதை கட்டி முடிக்கப்பட்டது.
பாலப்பணிகள் முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த பாலத்திற்கு அணுகு சாலை அமைக்க, நந்தியம்பாக்கம் கிராமத்தில், 7,433 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
கையகப்படுத்தப்பட்ட இடங்களில், 45 வீடு மற்றும் கடைகள் உள்ளன. இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில் இழுபறி நீடிப்பதால், அணுகுசாலை பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், விரைவு, சரக்கு மற்றும் புறநகர் ரயில்கள் என, தினமும் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
இதனால், பெரும்பாலான நேரங்களில் ரயில்வே கேட் மூடியே இருக்கும். கிராமவாசிகள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருந்து, ரயில்கள் வந்து சென்ற சில வினாடிகள் கேட் திறக்கப்படும்போது அவசர அவசரமாக பயணிக்கும் நிலை உள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், ரயில்வே கேட்டின் இடுக்குகளில் புகுந்து ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருக்கும்போது, கிராமவாசிகளின் அத்தியவாசிய பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்து, எங்களுடைய நில ஆவணங்களை பெற்றனர். இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.
தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்குப் பின், இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட அவசர பணத் தேவைகளுக்கு எங்களது வீடுகளை விற்க, அடமானம் வைக்க முடியாமல் தவித்து வருகிறோம்.
மேலும், வீடுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்வதற்கும் தயக்கமாக உள்ளது. பாலத்திற்கு அணுகு சாலை அமைய வேண்டுமானால், நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும்.
ஜூன், 4ம் தேதிக்குப் பின், தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே கேட்டை கடந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம். நீண்ட காலம் கிடப்பில் உள்ள ரயில்வே பாலத்திற்கான அணுகு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.