/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆவடி சந்திப்பு சாலை மீண்டும் குளறுபடி ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல் ஆவடி சந்திப்பு சாலை மீண்டும் குளறுபடி ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
ஆவடி சந்திப்பு சாலை மீண்டும் குளறுபடி ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
ஆவடி சந்திப்பு சாலை மீண்டும் குளறுபடி ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
ஆவடி சந்திப்பு சாலை மீண்டும் குளறுபடி ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 09, 2024 11:11 PM

திருவள்ளூர்: சென்னை பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பெரியகுப்பம் ரயில் நிலையம் பகுதிகளில் இருந்து திருவள்ளூர் நகர், திருத்தணி, திருப்பதி செல்லும் வாகனங்கள், ஜே.என்.சாலை வழியாக பயணிக்கின்றன. ஜே.என்.சாலை-ஆவடி புறவழி சாலை சந்திப்பு பகுதி குறுகலாக இருந்ததால், இந்த சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
கடந்த சில மாதங்களுக்கு முன், மூன்று சாலை சந்திப்பு அகலப்படுத்தப்பட்டது. திருவள்ளூரில் இருந்து ஆவடி செல்லும் வாகனங்கள் மற்றும் ஆவடியில் இருந்து ஜே.என்.சாலை இடதுபுறம் செல்லவும் தனிவழி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலை நடுவில் தடுப்பு அமைக்கப்பட்டு, துருப்பிடிக்காத இரும்புத் துாண்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சாலை பிரியும் இடத்தில் முக்கோணத்தில் 'பேவர் பிளாக்' கல் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது.
இதனால், ஆவடி சாலை சந்திப்பு பகுதி விசாலமாக உள்ளதால், வாகனங்கள் நெரிசலில் சிக்காத வகையில், இருபுறமும் பயணிக்கின்றன.
ஆனால், ஆவடி பகுதியில் இருந்து, திருவள்ளூர் செல்லும் வாகனங்களும், ஜே.என்.சாலையில் இருந்து ஆவடி சாலையில் செல்லும் வாகனங்களும் எதிரெதிர் திசையில் முந்திச் செல்ல முயல்வதால், போக்குவரத்தில் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
விசாலமான சாலை இருந்தும், காலை மற்றும் மாலையில் மட்டும் போக்குவரத்து போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகன நெரிசலை கட்டுப்படுத்துகின்றனர்.
பிற நேரங்களில், அடிக்கடி இச்சாலை சந்திப்பில் நெரிசல் தொடர்கிறது. எனவே, ஆவடி பைபாஸ் சாலை சந்திப்பில், ஜே.என்.சாலை நடுவில் சிறிய அளவிலான 'ரவுண்டானா' அமைத்து, தானியங்கி அமைத்தால் தான் வாகனங்கள் முறையாக செல்ல வசதியாக இருக்கும்; போக்குவரத்து நெரிசலும் குறையும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.