/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தாமரைப்பாக்கம் தடுப்பணை சுவர் சேதம் பருவமழைக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு தாமரைப்பாக்கம் தடுப்பணை சுவர் சேதம் பருவமழைக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு
தாமரைப்பாக்கம் தடுப்பணை சுவர் சேதம் பருவமழைக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு
தாமரைப்பாக்கம் தடுப்பணை சுவர் சேதம் பருவமழைக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு
தாமரைப்பாக்கம் தடுப்பணை சுவர் சேதம் பருவமழைக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 23, 2024 01:08 AM

திருவள்ளூர்ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து, கொசஸ்தலை ஆறு உற்பத்தியாகி, தமிழகத்தின் பள்ளிப்பட்டு, திருத்தணி, பூண்டி, தாமரைப்பாக்கம், காரனோடை, காட்டுப்பள்ளி வழியாக வங்க கடலில் கலக்கிறது.
வீணாகும் மழை நீரை சேகரித்து, விவசாய பயன்பாட்டிற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் வகையில், தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் நடுவில், கடந்த, 1862ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணை, 200 மீட்டர் நீளம், 28 மீட்டர் அகலம் கொண்டது. உயரம், 5.4 மீட்டர்.
மொத்தம், 70,000 கன அடி நீர் தேக்கி வைக்கப்படும் இந்த தடுப்பணையால், சுற்றியுள்ள 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
தற்போது, இந்த தடுப்பணையின் வயது 162 ஆண்டு. நுாற்றாண்டு கடந்த தாமரைப்பாக்கம் தடுப்பணை, கடந்த 2014ம் ஆண்டு, 13.35 கோடி ரூபாய் மதிப்பில், புனரமைப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், உபரிநீர் வெளியேற்றப்பட்டதாலும், பூண்டியில் இருந்து தாமரைப்பாக்கம் வரை உள்ள கிராம பகுதிகளில் இருந்து, வரும் உபரி நீர் காரணமாகவும், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு நிரம்பி வழிந்து, தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக, அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள கரையில், சேதமடைந்து கற்கள் கீழே விழுந்துள்ளன.
இதனால், பக்கவாட்டு கரை பலவீனமடைந்து உள்ளது. வரும் மழை காலத்திற்குள் இதனை சீரமைக்காவிட்டால், தடுப்பணை பக்கவாட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, பொதுப்பணித் துறையினர், சேதமடைந்த கரையினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.