Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு பருவமழைக்கு முன் கலெக்டர் நடவடிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு பருவமழைக்கு முன் கலெக்டர் நடவடிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு பருவமழைக்கு முன் கலெக்டர் நடவடிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு பருவமழைக்கு முன் கலெக்டர் நடவடிக்கை

ADDED : ஜூலை 23, 2024 01:09 AM


Google News
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை வரும் பருவமழை காலத்திற்குள் அகற்ற வேண்டும் என, கலெக்டர் பிரபுசங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 576 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 654 சிறு அளவிலான ஏரிகளும் உள்ளன.

மாவட்டம் முழுதும், 3,277 குளம், குட்டைகள் உள்ளன. மேலும், ஆரணி, கொசஸ்தலை மற்றும் கூவம் ஆகிய மூன்று பிரதான ஆறுகள் உள்ளன.

இந்த ஆறுகளில் மழைக் காலத்தில் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மற்ற காலத்தில், தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும். மேலும், ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய் துார்ந்து போயும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், குடிமராமத்து மற்றும் நீர்நிலைகள் துார் திட்டத்தின் வாயிலாக, 1,212 ஏரி, குளம், குட்டைகள் துார் வாரப்பட்டன. இருப்பினும், அரைகுறை பணியால், இத்திட்டம் முழு அளவில் நிறைவடையவில்லை.

இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், கடம்பத்துார், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஒன்றிய பகுதிகளில், ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு, மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியது.

மேலும், தண்ணீரும் ஏரிகளில் தேங்காமல் வீணாக வெளியேறியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை துார் வாரவேண்டும் என விவசாயிகள் திருவள்ளூர் கலெக்டரிடம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களிலும் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.

ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்வோர், தண்ணீர் தேங்காத வகையில் ஏரிக்கரையை உடைத்து விடுகின்றனர்.

மேலும், வரத்து கால்வாயை ஆக்கிரமித்தும், உபரிநீர் வெளியேறும் மடையினை உடைத்தும் விடுகின்றனர்.

உதாரணமாக, பூண்டி ஒன்றியத்தில், பாண்டூர் ஏரி 550க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருந்தாலும் அங்கு பாதிக்கு மேல் ஆக்கிரமிப்பு உள்ளது. பட்டரைபெரும்புதுார் ஏரியை துார் வாரப்படும் என்ற நிலையில், மிக அதிக ஆழத்திற்கு சவுடு மண் எடுக்கப்பட்டதால், மழைநீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கைவண்டுர் கிராமத்தில் பாசன கால்வாயில் உள்ள தடுப்பணை ஆக்கிரமிப்பு உள்ளது. திருத்தணி வட்டம் மத்துார், ஊத்துக்கோட்டை, ஆலப்பாக்கம் பகுதிகளிலும் பொதுப்பணித்துறை ஏரி மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

அதிகளவில் நெல் பயிரிடும் பகுதிகளான, சோழவரம், எல்லாபுரம், மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஏரிகளில் வரத்து கால்வாய் அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன.

கடந்த ஆண்டு உபரி நீர் வெளியேற வழியின்றி, மேற்கண்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் குளம் போல் தேங்கி, அறுவடைக்கு தயராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த ஆண்டு, வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றி, இந்த ஆண்டாவது நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் கூறியதாவது:

ஆக்கிரமிப்பு குறித்து விவசாயிகள் அளிக்கும் புகார் குறித்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் நில அளவையர், மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டு

பாசன கால்வாயை சீரமைக்க தேவையான கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், ஏரி, குளங்கள், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாருவதற்கும் வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பொதுப்பணித்துறை மற்றும் நில அளவீட்டு துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து கூட்டு புலத்தணிக்கை செய்ய வேண்டும். ஆய்வறிக்கையின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு நிலங்கள், நீர்நிலைகள், வரத்து கால்வாய்களில் பயிர் ஆக்கிரமிப்பு இருந்தால், சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே இடத்தில், மீண்டும் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us