Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழவேற்காடு கடற்கரை கருப்பாக மாறியதால் அச்சம்

பழவேற்காடு கடற்கரை கருப்பாக மாறியதால் அச்சம்

பழவேற்காடு கடற்கரை கருப்பாக மாறியதால் அச்சம்

பழவேற்காடு கடற்கரை கருப்பாக மாறியதால் அச்சம்

ADDED : ஜூன் 18, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
பழவேற்காடு: பழவேற்காடு கடற்கரை பகுதி திடீரென கருமையாக மாறி உள்ளதால், மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப்பகுதியில் 35 மீனவ கிராமங்கள் உள்ளன. திருமலை நகர் பகுதியில் துவங்கி, காட்டுப்பள்ளி வரை 13 கி.மீ., தொலைவிற்கு நீண்ட கடற்கரை அமைந்துள்ளது.

புத்தாண்டு, காணும் பொங்கல் மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணியர் வந்து கடல் அலைகளை ரசிப்பர்.

இந்நிலையில், பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களின் கடற்கரை பகுதிகளில், அலையில் அடித்து வரப்படும் மண் கருமையாக இருக்கிறது.

இதனால், அப்பகுதிகளில் கடற்கரை முழுதும் கருமையாக மாறி உள்ளது.

கடல் அலைகளும் வண்டல் மண் கலந்து சகதி போல் கரைக்கு வருகிறது. 2018 ஜனவரி மற்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணுார் துறைமுகத்திற்கு வந்த கப்பல்களில் இருந்து, கச்சா எண்ணெய் கொட்டி கடல் மாசடைந்தது.

இதனால், மீனவர்கள் பல மாதங்கள் தொழிலுக்கு செல்லாமல் இருந்தனர். தற்போது கடற்கரை பகுதி கருமையாக மாறி இருப்பது, மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற கவலையில் உள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:

காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கழிவுகள் கடலில் கலக்கின்றன. தற்போது கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது.

இதனால், அந்த கழிவுகள் கடற்கரை பகுதியில் ஒதுங்குகிறதா என தெரியவில்லை.

இதுவரை இது போன்று கடற்கரை பகுதி கருமையாக மாறியது இல்லை. திடீரென கடற்கரை கருமையாக மாறி இருப்பது, அச்சத்தை தருகிறது. இதனால் மீனவ மக்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏதும் பாதிப்புகள் உண்டாகுமா என சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடலில் உள்ள பாசிகள் கடல் அலைகளுடன் கரை ஒதுங்கும்போது, கடற்கரை பகுதி இது போன்று கருமை நிறம், செம்மண் நிறங்களில் மாறும். இதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. எண்ணெய் கழிவுகள் போன்று இருப்பின் தண்ணீரில் மிதக்கும்; தண்ணீருடன் கலக்காது. கடற்கரை பகுதியில் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, மீனவர்களின் அச்சம் தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us