/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஒரே நாளில் 85 ஜோடிகளுக்கு திருத்தணியில் திருமணம் ஒரே நாளில் 85 ஜோடிகளுக்கு திருத்தணியில் திருமணம்
ஒரே நாளில் 85 ஜோடிகளுக்கு திருத்தணியில் திருமணம்
ஒரே நாளில் 85 ஜோடிகளுக்கு திருத்தணியில் திருமணம்
ஒரே நாளில் 85 ஜோடிகளுக்கு திருத்தணியில் திருமணம்
ADDED : ஜூலை 08, 2024 06:23 AM

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 120க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இதுதவிர சிலர், வேண்டுதலுக்காக கோவிலில் திருமணம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மலைக்கோவிலில் 40 திருமணங்களும், தனியார் திருமண மண்டபங்களில் 45 திருமணங்களும் நடந்தன.
திருமண வரவேற்பு மற்றும் முகூர்த்தத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர், திருத்தணி மலைக்கோவிலில் குவிந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் மலைக்கோவிலில் பொதுவழி தரிசனத்தில், பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர்.
அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்களின் வாகனங்களால் திருத்தணி நகரம், சித்துார் சாலை, கமலா தியேட்டர் ஆகிய இடங்களிலிருந்து ம.பொ.சி., சாலை, அரக்கோணம் சாலை, முருகன் கோவில் மலைப்பாதை ஆகிய பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்போரூர்: முகூர்த்த நாளான நேற்று, திருப்போரூர் ஓ.எம்.ஆர்.., சாலை, மாடவீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுபமுகூர்த்த தினங்களில், ஏராளமானோர் வேண்டுதலை நிறைவேற்ற, தங்களின் இல்ல திருமணங்களை நடத்துகின்றனர்.
இதன் காரணமாக, முக்கிய முகூர்த்த தினங்களில் ஏராளமானோர் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருகின்றனர்.
குறிப்பாக, விடுமுறை தினங்களில் வரும் முகூர்த்த நாளில், ஏராளமானோர் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு படை எடுக்கின்றனர்.
அந்த வகையில், விடுமுறை நாளான நேற்றைய முகூர்த்த நாளில், ஏராளமான திருமணங்கள் நடந்தன.
அதுமட்டுமின்றி, கோவிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதி மற்றும் மற்ற தெருக்களில், 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த திருமண மண்டபங்களிலும் சுப நிகழ்ச்சிகள் நடந்தன.
இதன் காரணமாக, ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு, நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நான்கு மாடவீதிகளிலும், வாகனங்களை பலரும் தாறுமாறாக நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சென்றுவிட்டனர். திருப்போரூர் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.