Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆரணியில் முள்ளங்கி, தண்டு கீரை சாகுபடி

ஆரணியில் முள்ளங்கி, தண்டு கீரை சாகுபடி

ஆரணியில் முள்ளங்கி, தண்டு கீரை சாகுபடி

ஆரணியில் முள்ளங்கி, தண்டு கீரை சாகுபடி

ADDED : ஜூலை 08, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி: ஆடி மாதம் என்றால் அம்மன் கோவில் திருவிழாக்களும், கூழ் வார்த்தலும் நினைவுக்கு வரும்.

அந்த வகையில் நகர் பகுதி, கிராம பகுதி என்ற பாகுபாடுகள் இல்லாமல், அம்மன் கோவில்களில் ஆண்டு தோறும் ஆடி மாதங்களில் கூழ் வார்த்தலுடன் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

மவுசு அதிகம்


குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஆடி மாதங்களில் ஞாயிறு தோறும் வீடுகளில் கூழ் வார்த்தல் நிகழ்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கேழ்வரகு கூழுடன், முள்ளங்கி கார குழம்பு, தண்டு கீரை பொரியலும் பரிமாறப்படுவது வழக்கம்.

அதனால், ஆடி மாதத்தில் முள்ளங்கி மற்றும் தண்டு கீரைக்கு எப்போதும் மவுசு அதிகம்.

அதை அறிந்த பொன்னேரி தாலுகா, ஆரணி பகுதி விவசாயிகள், ஆனி மாதத்தில் முள்ளங்கி மற்றும் தண்டு கீரைகளை கூடுதலாக சாகுபடி செய்து ஆடி மாதத்தில் விற்பனை செய்வது வழக்கம்.

இது குறித்து ஆரணி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதங்களில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காய்கறி மொத்த வியாபாரிகள் அதிக அளவில் முள்ளங்கி மற்றும் தண்டு கீரை கேட்பது வழக்கம்.

நல்ல விலை கிடைப்பதால், ஆண்டு தோறும் ஆனி மாதங்களில் முள்ளங்கி, தண்டு கீரை சாகுபடி செய்வதை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாமந்தி தேவை உயர்வு


ஆடி மாதம், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தும் பெண் பக்தர்கள், மஞ்சள் ஆடை அணிந்து, அம்மனுக்கு மஞ்சள் நிற பூக்களால் அலங்காரம் செய்து வழிபடுவதும் வழக்கம்.

இதனால், ஆடி மாதத்தில் சாமந்தி பூக்களுக்கு அதிக தேவை ஏற்படும். ஆடி மற்றும் ஆவணி என தொடர்ந்து இரண்டு மாதங்களில் 10 வாரங்களுக்கு, பக்தர்கள் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவதும் உண்டு.

அம்மன் திருவிழாவை ஒட்டி, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் விவசாயிகள் சாமந்தி பயிரிட்டுள்ளனர். சாமந்தி தோட்டங்களில் தற்போது முன்பருவ பூக்கள் பூத்து குலுங்கி வருகின்றன.

ஆடி மாதத்தில் முழுவீச்சில் பூத்து குலுங்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஆடியில் அம்மன் உற்சவங்களுடன், ஆடி கிருத்திகையும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகையில் முருகப்பெருமானுக்கு செலுத்தும் காவடிக்காகவும் சாமந்தி பூக்களின் தேவை அதிகரிக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us