/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஊராட்சிகளில் செயலர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை; சுகாதாரம், குடிநீர் வினியோகம் பாதிப்பால் சிரமம் ஊராட்சிகளில் செயலர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை; சுகாதாரம், குடிநீர் வினியோகம் பாதிப்பால் சிரமம்
ஊராட்சிகளில் செயலர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை; சுகாதாரம், குடிநீர் வினியோகம் பாதிப்பால் சிரமம்
ஊராட்சிகளில் செயலர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை; சுகாதாரம், குடிநீர் வினியோகம் பாதிப்பால் சிரமம்
ஊராட்சிகளில் செயலர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை; சுகாதாரம், குடிநீர் வினியோகம் பாதிப்பால் சிரமம்
ADDED : ஜூன் 08, 2025 04:47 AM

போடி : மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டிஆப்ரேட்டர்கள் , கணினி இயக்குபவர்கள் பற்றாக்குறையால் ஊராட்சிகளில் சுகாதாரம், குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 130 செயலர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் 97 செயலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் 400 துப்புரவு பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 240 பேர் உள்ளனர். குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர்கள் 650 பேருக்கு 210 பேர் மட்டுமே உள்ளனர். ஊராட்சிகளில் கணினி ஆப்ரேட்டர் நிரந்தர பணியாளர் ஒருவர் கூட இல்லை.
ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ள அலுவலங்களில் அன்றாட பணிகள் மேற்கொள்வது, கூட்டங்கள் நடத்துதல், தீர்மானம் பதிவு செய்தல், வரவு, கணக்கு ஆவணங்கள் பராமரித்தல், மத்திய, மாநில அரசு திட்டங்கள் செயல் படுத்துதல், குடிநீர், ரோடு, தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதாரம், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
துப்புரவுப் பணியாளர்கள் அதிகளவு பற்றாக்குறையாக உள்ள நிலையில் பணியில் உள்ளவர்களும் வயதானவர்களாக உள்ளனர். மேலும் ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் பலருக்கு முறையாக கிடைப்பது இல்லை. எனவே சம்பளம் குறைவு என்பதால் சிலர் பணிபுரிய வருவது இல்லை. பல ஆண்டுகளாக துப்புரப் பணியாளர் நியமனம் இல்லாததால் ஊராட்சிகளில் சாக்கடை, குப்பை தேங்கி துப்புரவு பணியில் தொய்வு உள்ளன. சில ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி ஓரளவிற்கு நடக்கிறது.
குடிநீர் வினியோகம் பாதிப்பு:
மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர் பற்றாக் குறையால் தொட்டிகளில் நீர் ஏற்றி குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் வினியோகம், பழுது நீக்கம், தொட்டிகள் சுத்தம் செய்தல் பணி மேற்கொள்ள முடியவில்லை. சில ஊராட்சிகளில் தற்காலிகமாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவதால் இவர்கள் பணியில் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் உரிய நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
பல ஊராட்சிகளில் கணினி ஆப்பரேட்டர்கள் இல்லாததால் ஊராட்சி தகவல்களை கணனியில் பதிவு செய்யவும், முக்கிய தகவல்களை பாதுகாக்கவும், பரிமாற்றம் செய்ய முடியாமல் செயலர்கள் சிரமம் அடைகின்றனர். ஊராட்சிகளில் சுகாதாரம் பாதுகாக்கவும், உரிய நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்ய, வரி வசூல் மேற்கொள்ள காலியாக உள்ள செயலர், துப்புரவு பணியாளர், குடிநீர் ஆப்ரேட்டர், கணினி ஆப்ரேட்டர்களை நியமனம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.