/உள்ளூர் செய்திகள்/தேனி/ போதிய தண்ணீர் இருந்தும் வினியோகத்தில் குளறுபடியால் தட்டுப்பாடு பல்லவராயன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி சிரமம் போதிய தண்ணீர் இருந்தும் வினியோகத்தில் குளறுபடியால் தட்டுப்பாடு பல்லவராயன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி சிரமம்
போதிய தண்ணீர் இருந்தும் வினியோகத்தில் குளறுபடியால் தட்டுப்பாடு பல்லவராயன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி சிரமம்
போதிய தண்ணீர் இருந்தும் வினியோகத்தில் குளறுபடியால் தட்டுப்பாடு பல்லவராயன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி சிரமம்
போதிய தண்ணீர் இருந்தும் வினியோகத்தில் குளறுபடியால் தட்டுப்பாடு பல்லவராயன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி சிரமம்
ADDED : செப் 23, 2025 04:45 AM

உத்தமபாளையம்: பல்லவராயன்பட்டி ஊராட்சியில் போதிய தண்ணீர் வசதி இருந்தும் வினியோகத்தில் நிலவும் குளறுபடியால் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
உத்தமபாளையம் ஒன்றியம், பல்லவராயன்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியின் குடிநீர் தேவைக்கு எல்லப்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் பம்பிங் செய்து, அய்யம்பட்டி அருகே உள்ள தொட்டியில் நிரப்பி அங்கிருந்து குடிநீர் வாரியம் சப்ளை செய்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.92 லட்சம் செலவில் மேல்நிலைத் தொட்டிகள், பகிர்மான குழாய், வீடுகளுக்கு இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் இது வரை பணியினை முடிக்கவில்லை. குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
பராமரிப்பு இல்லாத கழிப்பறைகள் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பொது கழிப்பிடம் இருந்தும் ஒன்று கூட பராமரிக்க வில்லை. சேகரமாகும் குப்பையை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு சென்று தீ வைத்து எரிக்கின்றனர். இங்கு உரக்கிடங்கு, மண்புழு உரம் தயாரிக்கும் கூடங்கள் பயன்படுத்தாமலே உள்ளது. மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்பட்ட குடிசையும் பராமரிப்பு இல்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டம் காட்சி பொருளாக உள்ளன.
ஊராட்சி வணிக வளாகம் பயன்இன்றி பூட்டியே உள்ளது. பெரும்பாலான தெருக்கள் பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. பல இடங்களில் தெரு விளக்குகள் எரியாததால் இருளில் தவிக்கின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யசபா எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடம் திறக்கப்படாமல் பூட்டி வைத்துள்ளனர்.
குடிநீர் சப்ளை முறைப்படுத்துங்கள் கருப்பையா, பல்லவராயன்பட்டி: கிராமத்தில் சமீபமாக குடிநீர் பிரச்னை உள்ளது. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். ஜல் ஜீவன் திட்டப்பணிகள் கிடப்பில் உள்ளது. அதை விரைவுபடுத்தி குடிநீர் சப்ளையை சீராக்க வேண்டும். ஜல்லிகட்டு வீதியை சீரமைக்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
குண்டும், குழியுமான தெருக்கள் சோலை, விவசாயி, பல்லவராயன்பட்டி : சிமென்ட் ரோடு அமைத்து விட்டு அதனை தார் ரோட்டுடன் இணைக்க சிறு பாலம் அமைக்கவில்லை. அரை குறையாக ஒரு பக்கம் மட்டும் சாக்கடை கட்டி உள்ளனர்.
இன்னொரு பக்கம் சாக்கடை வசதி செய்யவில்லை. வீதிகள் குண்டும் குழியுமாக உள்ளது. வீதிகளை பராமரிக்க நடவடிக்கை வேண்டும்.
துணை சுகாதார நிலையம் வேண்டும் செல்லப்பாண்டி, பல்லவராயன்பட்டி : பொதுமக்களுக்கு சுகாதார நிலையம் தான் பெரிய பிரச்னையாக உள்ளது. கோம்பை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றால் சிந்தலைச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல கூறி வந்தனர். தற்போது கூறுவது இல்லை. இங்கு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். சமுதாய கூடத்தில் சமையலறை, டைனிங் ஹால் வசதி இல்லை.
ஜல்ஜீவன் பணி துவக்க ஏற்பாடு ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: துப்புரவு பணியாளர்கள் இருவர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 5 பேர் உள்ளனர்.
திடக்கழிவு மேலாண்மை கூடம் சரி செய்யப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க வாரிய அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். ஜல் ஜீவன் திட்டத்திற்கு வேறு ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் பணிகள் துவங்கும்.
பொது கழிப்பறை கதவுகள், குழாய்களை சிலர் சேதப்படுத்துகின்றனர். வணிக வளாகத்தை இடித்து புதிதாக கட்ட அனுமதி கோரி உள்ளோம். சமுதாய கூடத்தின் மேல் பகுதியில் சமையலறை, டைனிங் ஹால் வசதி செய்யவும், தெருக்களை பராமரிக்க நிதி கோரி கடிதம் கொடுத்துள்ளோம்என்றனர்.