/உள்ளூர் செய்திகள்/தேனி/ டாஸ்மாக் கடையை மாற்ற கோரி பா.ஜ., கவுன்சிலர்கள் போராட்டம் டாஸ்மாக் கடையை மாற்ற கோரி பா.ஜ., கவுன்சிலர்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை மாற்ற கோரி பா.ஜ., கவுன்சிலர்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை மாற்ற கோரி பா.ஜ., கவுன்சிலர்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை மாற்ற கோரி பா.ஜ., கவுன்சிலர்கள் போராட்டம்
ADDED : மார் 28, 2025 05:51 AM

போடி; போடி மெயின் ரோட்டில் மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி போடி நகராட்சி கவுன்சில் கூட்ட அறையில், பா.ஜ., கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இந்நகராட்சியின் கவுன்சில் கூட்டம் தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. கமிஷனர் பார்கவி, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, பொறியாளர் குணசேகர், மேலாளர் முனிராஜ், சுகாதார அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்
வெங்கடேசன், தி.மு.க.,: பல தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால் தெருக்களில் கழிவு நீர் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நடவடிக்கை தேவை.
பொறியாளர்: ஏப்., முதல் தெருக்கள் தோறும் ஆய்வு மேற்கொண்டு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜா, தி.மு.க.,: போடி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கான நிழற்குடை வசதி இன்றி பல ஆண்டுகளாக மக்கள் வெயில், மழையால் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலையில் சிரமப்படுகின்றனர். நிழற்குடை அமைக்க நடவடிக்கை தேவை.
வெங்கடேசன், தி.மு.க.,: எம்.பி., தேர்தலுக்கு பின் மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை. நிதி ஒதுக்கீடு செய்தும் செயல்படுத்தாமல் உள்ளன.
சுகாதார அலுவலர் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மொக்கைச்சாமி, தி.மு.க.,: 26வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தில் நுாலகம் அமைவதற்கான நடவடிக்கை எப்போது. ரேஷன் கடை அமைக்க இடம் தேர்வு செய்து தரும் படி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அப்படி உள்ள நிலையில் நகராட்சி இடத்தில் கோர்ட் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்த நிலையில், தற்போது கார், டூவீலர் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்ய அனுமதி கேட்பது எப்படி. நகராட்சி இடத்தை நீதிமன்றத்திற்கு தரக்கூடாது.
மணிகண்டன், பா.ஜ.,: நகராட்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் போடியில் உள்ள ஓட்டலில் சுகாதாரமற்ற உணவுகளும், மெயின் ரோட்டில் கெட்டு போன மீன்களும், அழுகிய நிலையில் பழங்களும் விற்பனை செய்து வருகின்றனர்.
கமிஷனர்: உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மணிகண்டன், சித்ராதேவி, பா.ஜ.,: மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நெடுஞ்சாலை துறை மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் மக்களுக்கு இடையூறாக செயல்படும் வகையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனை மாற்ற வேண்டும் என கோரி பா.ஜ., கவுன்சிலர்கள் கவுன்சில் கூட்ட அறையில் தலைவர் இருக்கை முன்பாக தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அனைத்து வார்டுகளிலும் தலா ஒரு சிறு பாலம் அமைக்க ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்வது உட்பட 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.