/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'மா' பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: போடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் 'மா' பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: போடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
'மா' பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: போடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
'மா' பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: போடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
'மா' பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: போடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 20, 2024 12:50 AM

போடி : தேனி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் 'மா' பதனிடும் தொழிற்சாலை அமைக்க கோரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
போடியில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் சங்கர்ராஜ், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் சக்திபாலன், முன்னோடி வங்கி மேலாளர் விஜய்சேகர் முன்னிலை வகித்தனர். நேர்முக உதவியாளர் (விவசாயம்) வளர்மதி வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது :
காமேஸ்வரன், விவசாயி, பெரியகுளம் : மா மகசூலில் ஆண்டு தோறும் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர். உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் மாம்பழங்களை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் கேரளாவில் இருக்கும் வியாபாரிகள் மாம்பழங்கள் வாங்காமல் செல்வதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே பெரியகுளத்தில் 'மா' பதனிடும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயராம், மீனாட்சியம்மன் கண்மாய் சங்க தலைவர், போடி : விவசாயத்திற்கு கண்மாயில் வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை காரணம் காட்டி சிலர் மண்ணை அள்ளி காளவாசலுக்கு பயன்படுத்தியும், விற்பனை செய்தும் வருகின்றனர்.
கலெக்டர் : மாவட்டத்தில் 162 கண்மாய், குளங்களில் விவசாயிகளின் நிலத்தின் அளவுக்கு ஏற்றது போல் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவறான முறையில் மண் அள்ளி பயன் படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனிபா, செயலாளர், அனைத்து விவசாயிகள் சங்கம், போடி : போடியில் மூன்று ஆண்டுகளாக மா விளைச்சல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரசிடம் மானியம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அகமலை, உலக்குருட்டி, ஊத்தாம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரோடு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் விளை பொருட்களை கழுதை, குதிரைகள் மூலம் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்க ரோடு வசதி செய்து தர வேண்டும்.
கலெக்டர் : மலைக் கிராமங்களுக்கு ரோடு வசதி செய்து தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
பாண்டியன், தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர், பெரியகுளம் : சர்க்கரை ஆலையில் கரும்பு எடை போடுவதில் எடை இயந்திரத்தில் முத்திரை இடப்படுகிறதா என்பது குறித்து மனு கொடுத்தும் பதில் இல்லை. முத்திரை இடும் போது வேளாண் இயக்குனர், அல்லது வேளாண் அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும்.
வெற்றிவேல், தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணி தலைவர், பெரியகுளம் : மா பொறுத்தவரை பயிர் காப்பீடு இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மா விவசாயத்திற்கு தேவையான மருந்து, உரங்களை மானியத்தில் வழங்க வேண்டும்.
விவசாயிகளிடம் மனுக்கள் பெறப்பட்டன. ஆடிப்பட்ட விதைப்புக்கு தேவையான விதைகள், இடுபொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறையினர் செய்திருந்தனர்.