/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோம்பையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு கோம்பையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
கோம்பையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
கோம்பையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
கோம்பையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 09, 2024 09:18 PM

தேவாரம்:தேனி மாவட்டம், தேவாரம் அருகே கோம்பை கரடு சிறுமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது பெருங் கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன், ஈம மண் கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தேவாரம் அருகே கோம்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரகாஷ், வரலாற்று ஆசிரியர்கள் முத்தழகு, பாஸ்கரன், நாகராஜ், குமரேசன், உத்தமபாளையம் கர்த்தராவுத்தர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் வர்கீஸ் ஜெயராஜ் கொண்ட குழுவினர் கோம்பை கரடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பெருங் கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன் படுத்திய முதுமக்கள் தாழிகள், ஈம மண்கலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 3000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறியதாவது: கோம்பை பகுதி 2500 ஆண்டுகள் பழமையான பல வரலாற்று சான்றுகளை பெற்றுள்ளன. இந்த ஊரின் வடகிழக்கில் உள்ள சாலை மலை கரடு என அழைக்கப்படும் சிறுமலை பகுதியில் விவசாய நிலத்தை சீர் செய்யும் போது பெரும் கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் இருந்தது.
இதில் முதுமக்கள் தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன் படுத்தப்படும் பெரிய பலகை கற்கள் வெளி வந்தன. முதுமக்கள் தாழியின் கழுத்து பகுதியில், கயிறு போன்று வடிவமைப்பு உடைய அலங்கார கோடுகள் இருந்தன. அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவு உள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருந்தன. இவை தாழிகள் சுடுவதற்கு முன்பு ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவை ஆகும்.
முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும். இங்கு ஈம கலன்களான கலயம், கூஜா, தட்டு, கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய மூடி போன்ற மண் கலன்கள் உடையாமல் முழு வடிவத்துடன் கிடைத்து உள்ளது. இவற்றில் 14 செ.மீ., உயரம் உடைய சிறிய கலயம் என பல்வேறு வடிவ உயரத்திலும், அகலத்திலும் கிடைத்து உள்ளன. மண்கலன்களின் உடல் பகுதி அகன்றும், வாய் மற்றும் அடிப்பகுதி குறுகிய தோற்றத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தன. மக்கள் தரையில் வைப்பதற்கு பயன் படுத்தப்படும் தாங்கிகள் மட்கலன்களுடன் இணைத்தே வட்ட வடிவத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவை வெளிப்புறம் சிவப்பாகவும், உட்புறம் கருப்பாகவும் உள்ளன. மண்ணில் இருந்து கிடைக்கும் காவி அல்லது சிவப்பு நிற வண்ணத்தை மண்கலன்களை சுடுவதற்கு முன்பு பூசப்படுவதால் பார்ப்பதற்கு வழவழப்பான தோற்றத்தை தரும். இங்கு கிடைத்த பொருட்கள் மூலம் இப்பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதகள் நாகரிகம், பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளது தெரிகிறது. பண்பட்ட வாழ்வியல் முறைகளை நன்கு எடுத்துரைக்கும் வகையில் மண்கலன்கள் உள்ளன. இப்பகுதி பெருங்கற்கால மக்கள் இனக் குழுவாக வாழ்ந்த வாழ்விடப் பகுதியாக இருந்துள்ளது என தெரிய வருகிறது. மேலும் ஆய்வு மேற்கொண்டால் பல தொல் தடயங்கள் கிடைக்கும். என்றனர்.