Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/3 மாதங்களாக செயல்படுகிறதா நவீன மயானம்; அதிகாரியின் முரண்பாடான கடிதத்தால் அதிர்ச்சி

3 மாதங்களாக செயல்படுகிறதா நவீன மயானம்; அதிகாரியின் முரண்பாடான கடிதத்தால் அதிர்ச்சி

3 மாதங்களாக செயல்படுகிறதா நவீன மயானம்; அதிகாரியின் முரண்பாடான கடிதத்தால் அதிர்ச்சி

3 மாதங்களாக செயல்படுகிறதா நவீன மயானம்; அதிகாரியின் முரண்பாடான கடிதத்தால் அதிர்ச்சி

UPDATED : ஜூன் 05, 2025 10:38 AMADDED : ஜூன் 05, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சியில் நவீன மயானம் மூன்று மாதமாக செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள பதிலால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தேவகோட்டையில் 60 ஆயிரம் மக்கள் தொகை இருந்தும் நகராட்சிக்கு சொந்தமாக மயானம் இல்லை. அருகில் உள்ள ஊராட்சியில் தான் இறந்தவர்களின் உடல் எரியூட்டல் நடந்தது.

பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் ரூ. 85 லட்சத்தில் விறகு மூலம் உடல்களை எரிக்கும் நவீன எரிவாயு மயானம் கட்டப்பட்டது. செயல்படாமல் இருந்த நிலையில் கூடுதல் நிதியில் காஸ் சிலிண்டர் மூலம் இறந்தவர்கள் உடல்களை எரிக்கும் மயானமாக மாற்றியும் இது வரை செயல்பாட்டிற்கு வரவே இல்லை.

எரிவாயு மயான பராமரிப்பு குத்தகைக்கு விடப்பட்டது. ரூ. 3 ஆயிரம் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. குத்தகைதாரர் தனது செலவில் சிலிண்டர்களை பொருத்தி விட்டார். ஆனாலும் செயல்பாட்டிற்கு வரவில்லை. எரிவாயு மயானம் நிறுவிய நிறுவனத்தினர் செயல்பாட்டை (டெமோ) செய்து காண்பிக்கவில்லை என காரணம் கூறப்படுகிறது.

மயானத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறு இந்திய கம்யூ. ஹிந்து முன்னணி போராட்டங்களை அறிவித்தனர். கம்யூ. கட்சியினரிடம் ஏப். முதல் தேதி செயல்படுவதாக கூறியதை தொடர்ந்து அவர்களும் நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்தனர்.

செயல்படாத நிலையில் ஹிந்து முன்னணியினர் தொடர் போராட்டங்களை அறிவித்தனர்.

போலீசார் ஏப். முதல் தேதி முதல் மயானம் செயல்படுவதால் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என எழுத்து மூலம் மறுத்து வந்தனர்.

ஹிந்து முன்னணி தலைவர் சுரேஷ் கலெக்டரிடம் தகவல் உரிமை அறியும் சட்டம் மூலம் விவரம் கேட்டார். இதற்கு நகராட்சி அதிகாரிகள் கொடுத்த பதில் வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

கடந்த பிப். 24ந்தேதியே எரிவாயு மயானம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டதாகவும் உடல் ஒன்றிற்கு ரூ மூவாயிரம் கட்டணம் நிர்ணயித்து உள்ளதாக பதில் தெரிவித்துள்ளனர்.

தவறான ஒரு தகவலை தகவல் அறியும் சட்டத்தில் தெரிவித்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் கூட மயானம் பூட்டியே கிடந்தது. இதுவரை ஒரு உடலும் எரிக்கப்படவில்லை.

பிப். 24 ந்தேதி முதல் செயல்படுவதாக கூறும் நகராட்சி முறைப்படி இன்று வரை மக்களுக்கு தெரியப்படுத்தி அறிவிப்பு வெளியிடாதது ஏன். அரசு திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் தயங்குவதற்கு காரணம் என்ன.

மாவட்ட கலெக்டரிடம் பல முறை புகார் அளித்தும் அவரும் இதில் கவனம் செலுத்தாதது அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us