/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்சிவகங்கையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : பிப் 24, 2024 05:06 AM

சிவகங்கை, :சிவகங்கையில் கடந்த 3 ஆண்டாக வளர்ச்சி பணி நடக்காததை கண்டித்து நேற்று நடந்த நகராட்சி கவுன்சில் கூட்டத்தை துணை தலைவர் (தி.மு.க.,) உட்பட 3 பேர் புறக்கணித்தனர். அ.தி.மு.க.,- அ.ம.மு.க., கவுன்சிலர்கள் நேற்று மாலை 4:00 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை நகராட்சி அவசர கூட்டம் நேற்று தலைவர் துரை ஆனந்த் (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் கார்கண்ணன் (தி.மு.க.,) முன்னிலை வகித்தார். கமிஷனர் செந்தில்குமரன், பொறியாளர் வரலட்சுமி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் காலை 11:00 மணிக்கு துவங்குவதாக அறிவித்து, மதியம் 12:00 மணி வரை தொடங்கவில்லை. அதற்கு பின் கூட்டம் துவங்கியதும், நகராட்சி துணை தலைவர் (தி.மு.க.,) கார்கண்ணன் தலைமையில் தி.மு.க., கவுன்சிலர்கள் அயூப்கான், துபாய் காந்தி, காங்., கவுன்சிலர் விஜயக்குமார் ஆகியோர் கடந்த 3 ஆண்டாக நகராட்சியில் எவ்வித வளர்ச்சி பணியும் நடக்கவில்லை என்பதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி சென்றனர்.
துணை தலைவர், கவுன்சிலர் அயூப்கான் ஆகிய இருவர் மட்டுமே வருகை பதிவில் கையெழுத்திட்டனர். கவுன்சிலர்கள் துபாய் காந்தி, விஜயகுமார் ஆகியோர் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க., உள்ளிருப்பு போராட்டம்
மேலும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் என்.எம்.,ராஜா, ஜெயாஜெனிபர், ராதா கிருஷ்ணகுமார், சண்முகத்தாய், அ.ம.மு.க., கவுன்சிலர்கள் அன்புமணி, தமிழ்செல்வி ஆகிய 6 பேர் வருகை பதிவில் கையெழுத்திடாமல், கவுன்சில் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி தலைவர் கவுன்சில் கட்டடத்தை பூட்டி விடுங்கள் எனக்கூறிவிட்டு சென்றார்.
இதில் அதிருப்தியான அ.தி.மு.க., - அ.ம.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் நகராட்சி கமிஷனர் செந்தில்குமார் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும், போராட்டத்தை கைவிடவில்லை. இதனால், மாலை 4:00 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நீடித்தது.
சிவகங்கை (அ.தி.மு.க.,) செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கமிஷனரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதும், அ.தி.மு.க.,- அ.ம.மு.க., கவுன்சிலர்கள் வருகை பதிவில் கையெழுத்திட்டு, போராட்டத்தை கைவிட்டனர்.
நேற்று நடந்த அவசர கூட்டத்தில் ரூ.2.26 கோடியில் 2,056 தெருவிளக்கு (எல்.இ.டி., பல்பு) அமைத்தல், வாரச்சந்தை உள்ளிட்ட 8 டெண்டர்களுக்கான ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.