ADDED : பிப் 25, 2024 06:33 AM
சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே பாரம்பரியமிக்க அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்றன. 55 பேர் காயமடைந்தனர்.
மாசிமகத்தை முன்னிட்டு ஐந்துநிலை நாட்டார்களால் ஆயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
பாறை அடிவாரத்தில் தொழு முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதல் படி காளைகள், வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 136 காளைகளும் 89 வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
ஐந்து மங்கலப் பகுதியிலிருந்து விழா குழுவினர் துணி எடுத்து வந்து மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர்.
மதியம் 12:00 மணிக்கு சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் மாடுகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. இதை தொடர்ந்து மற்ற மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன. மாடுகளை வீரர்கள் அடக்க முயன்றனர்.
சில மாடுகள் பிடிபட்டன, பெரும்பாலான மாடுகள் ஆக்ரோஷத்துடன் வெளியேறின. முன்னதாக பாறையை சுற்றியுள்ள வயல், கண்மாய் பகுதிகளில் கட்டுமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் 1000க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன மாடுகள் முட்டியதில் 55 பேர் காயமடைந்தனர். பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தனியார் மருத்துவமனைகள் சார்பிலும் முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருப்புத்துார் டி.எஸ்.பி., ஆத்மநாதன் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு ஏற்பாடுகளை ஆர்.டி.ஓ., பால்துரை உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்தனர்.
இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, ஐந்துநிலை நாட்டு அம்பலகாரர்கள் பங்கேற்றனர். பாறை முழுவதும் மனிதப்போர்வை போர்த்தியது போல் பெண்கள், சிறுவர்கள் கூட்டமாக அமர்ந்து மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.