ADDED : ஜன 06, 2024 06:02 AM
கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் ஊர் குளத்தான்பட்டியில் மார்கழி வெள்ளியை முன்னிட்டு நடந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் 14 பேர் காயமடைந்தனர்.
இப்பகுதியில் மஞ்சுவிரட்டு துவக்கத்திற்கு முன்னோட்டமாக முதல் மஞ்சுவிரட்டு மார்கழி வெள்ளியில் இள வட்ட மஞ்சுவிரட்டு' ஆக துவங்குவது வழக்கம்.
நேற்று ஊர்குளத்தான்பட்டி முனியன் கோயில் படைப்பை முன்னிட்டு இந்த மஞ்சுவிரட்டு நடந்தது. காலை 10:15 மணி அளவில் கிராமத்தினர் முன்னிலையில் மலையடிவாரத்தில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. சிவகங்கை மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம்,மதுரை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கட்டு மாடுகளாக காளைகள் அவிழ்க்கப்பட்டன. அதில் மாடு முட்டியதில் 14 பேர் காயமடைந்து திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 5 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததால் நெடுமரம் வி.ஏ.ஓ.,கோகிலாதேவி புகாரின் பேரில் கண்டவராயன்பட்டி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.