ADDED : ஜூலை 09, 2024 05:10 AM
சிவகங்கை: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் அரசாணை 243க்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் பள்ளிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய தைனேஷ் கூறியதாவது:தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய கோரி மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் வரும் ஜூலை 31 வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவர். நேற்று முதல் மூன்று நாட்களுக்கு வட்டார கல்வி அலுவலகம் முன்பும், தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் இம்மாதம் இறுதி வரை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி பஞ்சுராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தமிழ்செல்வம், செந்தில் அலெக்ஸ், உமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேவகோட்டை
தேவகோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அழகப்பன், போஸ் தலைமை வகித்தனர். புரட்சித்தம்பி, ராமராஜ் முன்னிலை வகித்தனர். அந்தோணிராஜ், ஆரோக்கியசாமி, பாலசுப்பிரமணியம், சாமுவேல், சேவுகராஜன், இன்னோசன்ட் பேசினர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பால்துரை தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கீதா, ஞானவிநாயகன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஞான அற்புதராஜ், வைரம், ராகவன் பேசினர். மாவட்ட பொருளாளர் சிலம்பாயி நன்றி கூறினார்.