ADDED : ஜூன் 29, 2024 02:44 AM
ரயிலில் அடிபட்ட
மூதாட்டி உடல் மீட்பு
சேலம்: சேலம், தாதம்பட்டி, பாரதி நகரை சேர்ந்த முனுசாமி மனைவி குன்னியம்மாதேவி, 75. அதே பகுதியை சேர்ந்த, பூலோகன் மனைவி தனலட்சுமி, 75. இருவரும், தனலட்சுமியின் மகன் பூவரசன் வீட்டுக்கு செல்ல, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தாதம்பட்டி ரயில்வே கேட் அருகே தண்டவாள பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இருவருக்கும் காது சரியாக கேட்காத நிலையில் சேலம் - விருதாசலம் பயணியர் ரயிலில் அடிபட்டு, இருவரும் துாக்கி வீசப்பட்டனர். ரயில்வே போலீசார், தனலட்சுமி உடலை கைப்பற்றினர். குன்னியம்மாதேவி உடல் கிடைக்கவில்லை. இதனால் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, தேடுதல் பணி நடந்தது.
அப்பகுதியில் வெளிச்சம் இல்லாததால் இரவு முழுதும் தேடியும் குன்னியம்மாதேவி உடல் மீட்கப்படவில்லை. நேற்று காலை, தனலட்சுமி உடல் கிடந்த இடத்தில் இருந்து, 200 மீ., தொலைவில் சாக்கடை கால்வாய் ஓர புதரில் குன்னியம்மாதேவி உடல் மீட்கப்பட்டது.
'போதை'க்கு மாத்திரை
மேலும் 4 பேர் கைது
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், கடந்த, 26ல் 4 ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த, 3 பேரை பிடித்து விசாரித்ததில், 'போதை'க்கு வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. இதனால், 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் மாத்திரைகளை கொடுத்த, 'மெடிக்கல் ரெப்' சுப்ரமணி, 55, கைது செய்யப்பட்டார். இவர்களிடம் விசாரித்ததில், மேலும் ஒரு கும்பல், வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. அதன்படி சின்னதிருப்பதியை சேர்ந்த மருந்து மொத்த விற்பனை டீலர் ரமேஷ், 63, கிச்சிப்பாளையம் சரண், 40, மல்லுார் நிர்மல்ராஜ், 33, குரங்குச்சாவடி கரண், 20, ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பறிமுதல்
வடமாநிலத்தவர் கைது
வாழப்பாடி: வாழப்பாடி போலீசார், கொட்டவாடி பிரிவு சாலை அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'டியோ' மொபட்டில், 4 மூட்டைகளுடன் வந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். அவரை சுற்றிவளைத்து போலீசார் சோதனை செய்ததில், புகையிலை பொருட்கள் என தெரிந்தது.
விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த சார்வன்குமார், 20, என்பதும், செவ்வாய்ப்பேட்டையில் புகையிலை பொருட்களை வாங்கி விற்க முயன்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள், அவரது மொபட்டை பறிமுதல் செய்தனர்.
கேமரா பொருத்த
போலீஸ் ஆலோசனை
தாரமங்கலம், ஜூன் 29-
தாரமங்கலத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் வளாத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் பேசுகையில், ''குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும், 'சிசிடிவி' கேமரா அவசியம். அதனால் மக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலைகள் உள்பட, 50 இடங்களில், 100 கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சங்கங்கள் மூலம் உதவ வேண்டும்,'' என்றார். இதில், நகை, மளிகை, ஜவுளி, தினசரி மார்கெட் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
9 கடைகளில்உரம் விற்க தடை
ஆத்துார்: சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தலைமையில் மாவட்ட, வட்டார அளவில் கண்காணிப்பு, நிலைக்குழு அமைக்கப்பட்டு, 6 கூட்டுறவு, 30 தனியார் உரக்கடைகளில் சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தம்மம்பட்டியில், 4, தலைவாசலில், 2, ஆத்துார், கெங்கவல்லியில் தலா, 1 என, 9 தனியார் உரக்கடைகளில் உரம் விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பு பராமரிப்பு இல்லாதது, பதிவேடு, பட்டியல், மாத இருப்பு அறிக்கை உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்ட, 21 கடைகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.