ADDED : ஜூன் 17, 2024 01:24 AM
'ஹார்டுவேர்' கடையில்
ரூ.7.50 லட்சம் திருட்டு
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, ஜம்புலிங்கம் தெருவை சேர்ந்தவர் சோதாராம், 72. இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். தற்போது, அவர் வசிக்கும் தெருவில் ஹார்டுவேர் - பெயின்ட் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று மதியம், 1:00 மணிக்கு ெஹல்மெட் எடுக்க கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் வழியே உள்ளே புகுந்த கும்பல், கல்லாப்பெட்டியில் இருந்த, 7.50 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பியுள்ளது. இதுகுறித்து அவர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கடையில் கைவரிசை காட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.
பெரியார் பல்கலையில்
'ஜம்போ தீவு பிரகடனம்' விழா
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில் நாட்டு
நலப்பணி திட்டம் சார்பில், மருது சகோதரர்களின் விடுதலை போராட்டமான, 'ஜம்போ தீவு பிரகடனம்' விழா நேற்று நடந்தது. பேராசிரியர் ஜெயராமன் தலைமை வகித்தார். சேலம் அரசு கலைக்கல்லுாரி முனைவர் தென்னரசு, மருது சகோதரர்களின் விடுதலை போராட்டம் குறித்தும், ஆங்கிலேயருக்கு எதிரோக மக்களை திரட்டி போராட்டத்துக்கு தயார் செய்த, 'ஜம்போ தீவு' பிரகடன அறிக்கை குறித்தும் பேசினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களான முனைவர்கள் தேவண்ணன், இளங்கோவன், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஜூனியர் டேக்வாண்டோ
120 பேர் பங்கேற்பு
சேலம்: தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் சார்பில் மாநில அளவில், 4வது ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி, சேலம் காந்தி மைதான உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. தலைவர் சாக்ரடீஸ், செயலர் சித்தேஸ்வரன், போட்டியை தொடங்கி வைத்து நடுவராக செயல்பட்டனர். சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி, தென்காசி, நாமக்கல், துாத்துக்குடி உள்பட, 22 மாவட்டங்களை சேர்ந்த, 12 முதல், 16 வயதுக்கு உட்பட்ட, 120 பேர் பங்கேற்றனர். இவர்களில், 70 வீரர்கள்; 50 வீராங்கனைகள் அடங்கும். 'நாக் அவுட்' முறையில் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெறுவோர், ஒடிசாவில் இம்மாதம் நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூதாட்டிகளிடம் சில்மிஷம்
'போதை' வாலிபர் கைது
சேலம்: சேலம், கோரிமேடு அடுத்த ஜல்லிகாட்டை சேர்ந்த கட்டட தொழிலாளி ரவிக்குமார், 24. இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'போதை' தலைக்கேறிய நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் புகுந்து, 75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்று தாக்கியுள்ளார். அவர் பிடியில் இருந்து தப்பி, மூதாட்டி கூச்சலிட, மக்கள் திரண்டனர். பின் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, அவரை
வீட்டுக்கு அனுப்பினர். சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அவர், அங்குள்ள குடிசை வீட்டின் திண்ணையில் துாங்கிக்கொண்டிருந்த, 65 வயது மூதாட்டியை கட்டிப்பிடித்தார். அவரும் கூச்சலிட, மக்கள் அவரை, மீண்டும் 'கவனிப்பு' செய்தனர். பின் கன்னங்
குறிச்சி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மரங்களால் ஏற்படும் நன்மை
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அடுத்த குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளனர். நேற்று முன்தினம், பள்ளி அருகே, அரச மரத்தடிக்கு மாணவ, மாணவியர் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அமர வைத்து, மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், துாய்மை காற்று, இயற்கை பாதுகாத்தல், மரத்தினால் ஊரின் பெருமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நேரடியாக விளக்கினர். அதேபோல் கட்டபுளிய மரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள ஆல மரத்தடிக்கு அழைத்துச்
சென்று, அதன் பெருமை குறித்து விளக்கினர்.
இதில் அரசு பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம்
உள்பட பலர் பங்கேற்றனர்.
கண் அறுவை சிகிச்சை
15 பேர் தேர்வு
பனமரத்துப்பட்டி, ஜூன் 17-
பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் ரத்த தான முகாம், இலவச கண் சிகிக்சை முகாம் நேற்று நடந்தது. குழும தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். சேலம் கேலக்சி ரோட்டரி சங்க தலைவர் நடேஷ்ராஜா, செயலர் குமரேஷ், முகாமை தொடங்கி வைத்தனர். இதில், 40க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், ரத்த தானம் செய்தனர். மேலும் கண் சிகிச்சை முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். அதில், 15 பேர், அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு, சேலம் சிவராம்ஜி ரத்த வங்கி தலைவர் வசந்த்புஷல்கர், சான்றிதழ், மரக்கன்று வழங்கினார். சேலம் கேலக்சி ரோட்டரி சங்க நிர்வாகிகள், பனமரத்துப்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கும்பாபிேஷகம் கோலாகலம்ஓமலுார்: ஓமலுார் டவுன் பஞ்சாயத்து வாரச்சந்தை பின்புறம் உள்ள பாப்பார முனியப்பன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கடந்த, 14ல் கிராமசந்தி நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நேற்று காலை, 2ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 7:00 மணிக்கு பாப்பார முனியப்பன், புடவை காரியம்மன், ஜடா முனி, மகா முனி ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபி ேஷகம் நடந்தது. திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இடிதாக்கி மின்சாதன பொருட்கள் சேதம்ஓமலுார்: ஓமலுார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை, அரை மணி நேரத்துக்கு மேல் பெய்தது. இதில் தும்பிப்பாடி, குருவரெட்டியூரில் மழையின்போது இடி, தென்னை மரத்தின் மீது விழுந்து எரிந்தது. அப்போது அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து ரவி, செல்வக்குமார் வீடுகளில் இருந்த, 'டிவி, ப்ரிட்ஜ்' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமாகின. அங்குள்ள சில வீடுகளிலும் மின்சாதன பொருட்கள் பழுதாகின. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.