ADDED : ஜூன் 17, 2024 01:01 AM
தெருவிளக்கு இல்லை
குற்றங்களுக்கு 'வழி'
மகுடஞ்சாவடி: இடங்கணசாலை நகராட்சி, கே.கே.நகரில் இருந்து மின் மயானம் வழியே செல்லும், 1 கி.மீ., சாலையில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவில் அந்த வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் அடர்ந்த செடி, கொடிகள் நிறைந்துள்ளதால், பாதசாரிகள் அச்சத்துடன் செல்லும் அவலம் தொடர்கிறது. மேலும் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு வழி வகுக்கும் படி உள்ளதால், தெரு விளக்கு கள் அமைக்க, அப்பகுதி பெண்கள் வலியுறுத்தினர்.
பயன்பாட்டுக்கு வந்தஎரிவாயு தகன மேடை
சேலம்: சேலம் மாநகராட்சி, 18, 23வது கோட்டத்துக்கு உட்பட்ட காசக்காரனுார், திருவாக்கவுண்டனுார் பகுதிகளில் மயான வசதி இல்லை. பல்வேறு இடையூறுக்கு பின் வேடி கவுண்டர் காலனி மயானத்தில் எரிவாயு தகனமேடை, சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கு சேலம் மேற்கு சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், 15 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணி நடந்தது. தகனமேடை, சுற்றுச்சுவர் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று, எம்.எல்.ஏ., அருள், தகனமேடையை இயக்கி, அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
தெரு நாய்கள் தொல்லைநகராட்சி மக்கள் அவதி
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இதில் விநாயகபுரம், நரசிங்கபுரம், வீட்டுவசதிவாரியம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் குடியிருப்புகள், அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகள், வணிக வளாக கடைகள் உள்ளன. அப்பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கூட்டமாக சேர்ந்து செல்லும் நாய்கள், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்கின்றன. இதற்கு நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.