/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அமைச்சர் மகள் இடத்தில் 6 டன் சந்தன கட்டைகள் மீட்பு அமைச்சர் மகள் இடத்தில் 6 டன் சந்தன கட்டைகள் மீட்பு
அமைச்சர் மகள் இடத்தில் 6 டன் சந்தன கட்டைகள் மீட்பு
அமைச்சர் மகள் இடத்தில் 6 டன் சந்தன கட்டைகள் மீட்பு
அமைச்சர் மகள் இடத்தில் 6 டன் சந்தன கட்டைகள் மீட்பு
ADDED : ஜூன் 15, 2024 01:51 AM
சேலம்:சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் கடந்த 3ல் சேலம் வனத்துறையினர் நடத்திய வாகன சோதனையில், கேரள பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 1.50 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10ல், அவர்களை காவலில் எடுத்து வனத்துறையினர் விசாரித்ததில், மலப்புரத்தில் சந்தன கட்டைகளை வெட்டி, வாகனத்தில் கொண்டு வந்து சேலத்தில் ஒரு இடத்தில் நிறுத்துவதும், மற்றொரு கும்பல் அந்த வண்டியை புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதும், இது போன்று பலமுறை கடத்தியதும் தெரியவந்தது.
நேற்று முன்தினம் சேலம் மாவட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் தலைமையில் தனிப்படையினர், விழுப்புரம் மாவட்ட வனத்துறையினர் என, 25 பேர் அடங்கிய குழுவினர் புதுச்சேரி சென்றனர்.
வில்லியனுார் அருகே உளவாய்க்காலில் உள்ள சந்தன ஆயில் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்ட போது, 6 டன் சந்தன கட்டைகள் பதுக்கப்பட்டிருந்தன. அரை டன் அளவுக்கு கட்டைகளை அரைத்து பவுடராக வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், சேலம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
சந்தன கட்டை சிக்கிய இடம், புதுச்சேரி அமைச்சர் தேனீ ஜெயகுமாரின் மகள் பிரேமாவுக்கு சொந்தமானது. அந்த இடத்தை அவர் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, சந்தன எண்ணைய் தயாரிக்கும் ஆலைக்காக வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த ஆலைக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக சந்தன கட்டைகளை வினியோகித்து வந்துள்ளனர். தற்போது சிக்கியவர்களிடம் கேரள வனத்துறையினர் விசாரித்துள்ளனர். மலப்புரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சந்தன கட்டைகளை வெட்டி பதுக்கி வைத்து, அதை கடத்தியது தெரியவந்துள்ளது.
மலப்புரத்தில் சந்தன கட்டைகள் வெட்டப்பட்ட இடத்தில், கேரள மாநில வனத்துறை அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர். அங்கும் கடத்தல் வழக்கில் பலர் சிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.