Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு

கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு

கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு

கர்நாடகாவில் 4 அணைகளும் நிரம்பின: மேட்டூர் நீர்மட்டம் 70 அடியாக உயர்வு

ADDED : ஜூலை 22, 2024 12:18 PM


Google News
மேட்டூர்: கர்நாடகா மாநிலத்தில் நான்கு அணைகளும் நிரம்பிய நிலையில் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம், 70 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி, அதன் துணையாறுகளின் குறுக்கே கபினி, கே.ஆர்.எஸ்., ேஹரங்கி, ேஹமாவதி என நான்கு அணைகள் உள்ளன. கர்நாடகா, கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், நான்கு அணைகளுக்கும் நீர்வரத்தும் அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி கபினியில், 17.5 டி.எம்.சி.,; கே.ஆர்.எஸ்.,ல், 43.5; ஹேரங்கியில், 7; ஹேமாவதியில், 34.5 டிம்எசி என, 102 டி.எம்.சி., நீர் உள்ளது. இன்னும், 12 டி.எம்.சி., நீர் மட்டுமே நிரம்ப வேண்டியுள்ளது.

தென்மேற்கு பருவ மழை நீடிப்பதால் ஏற்கனவே கபினியில் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று கே.ஆர்.எஸ்., ேஹரங்கி, ேஹமாவதி ஆகிய அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் ஹேரங்கியில், 17,291, ேஹமாவதியில், 12,079 கனஅடி நீர் திறக்கப்பட்டது. கே.ஆர்.எஸ்., அணைக்கு, 51,375 கனஅடி நீர் வந்த நிலையில் வினாடிக்கு, 50,000 கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடகாவின் நான்கு அணைகளும் நேற்று ஏறத்தாழ நிரம்பியதால், இனி வரும் நீர் முழுமையாக காவிரியில் வெளியேற்றப்படும்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், 68,843 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 71,777 கன அடி; மாலையில், 57,409 கனஅடியாக சரிந்தது. நீர்மட்டம், 70.80 அடி; நீர் இருப்பு, 33.39 டி.எம்.சி.,யாக உயர்ந்தது.

டெல்டா பாசன நீர் திறப்பு?

திருச்சி, தஞ்சாவூர் உள்பட, 13 டெல்டா மாவட்டங்களில், 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை, 17.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும். குறுவைக்கு ஜூன், 12ல் நீர் திறக்க மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தபட்சம், 90 அடிக்கு மேல், நீர் இருப்பு, 52 டி.எம்.சி., இருக்க வேண்டும்.

நடப்பாண்டு கடந்த ஜூன், 12ல் மேட்டூர் அணை நீர்மட்டம், 43.12 அடி, நீர் இருப்பு, 13.97 டி.எம்.சி., இருந்தது. நேற்று நீர் இருப்பு, 33.39 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,யாக உயர இன்னும், 18.61 டி.எம்.சி., தேவை. இதனால் விரைவில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது.

விசைப்படகு இயக்கம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, காவிரி கரையோரத்தில் பண்ணவாடி, கோட்டையூர் செட்டிப்பட்டியில் இருந்து மறுகரையில் உள்ள தர்மபுரி மாவட்டம் நாகமறை, ஒட்டனுார், ஏமனுாருக்கு பயணியர் விசைப்படகு, பரிசல் இயக்கப்படுகின்றன. கர்நாடகாவின் கபினியில் திறக்கப்பட்ட உபரிநீர் வந்ததால், கடந்த, 17ல், மேட்டூர் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், 3 இடங்களிலும் பயணியர் விசைப்படகு, பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 70 அடியாக உயர்ந்தால் பண்ணவாடி பரிசல்துறை வரை தண்ணீர் தேங்கியது. இதனால் நான்கு நாட்களுக்கு பின் பண்ணவாடியில் இருந்து நாகமறைக்கு பயணியர் விசைப்படகு இயக்கப்பட்டது. நீர்மட்டம் மேலும் உயர்ந்தால், கோட்டையூர் - ஒட்டனுார், செட்டிப்பட்டி - ஏமனுாருக்கு விசைப்படகு, பரிசல் போக்குவரத்து தொடங்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us