Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கணினி அறிவியலில் மட்டும் 17,324 சீட்கள் அதிகரிப்பு: 'காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங்' வழிகாட்டியில் தகவல்

கணினி அறிவியலில் மட்டும் 17,324 சீட்கள் அதிகரிப்பு: 'காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங்' வழிகாட்டியில் தகவல்

கணினி அறிவியலில் மட்டும் 17,324 சீட்கள் அதிகரிப்பு: 'காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங்' வழிகாட்டியில் தகவல்

கணினி அறிவியலில் மட்டும் 17,324 சீட்கள் அதிகரிப்பு: 'காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங்' வழிகாட்டியில் தகவல்

ADDED : ஜூலை 22, 2024 12:17 PM


Google News
சேலம்: 'நடப்பாண்டு கவுன்சிலிங்கில், 22,763 சீட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதில், 17,324 சீட்கள், கணினி அறிவியல் தொடர்பானவை' என, 'காலைக்கதிர்' நடத்திய, 'இன்ஜினியரிங் கவுன்சிலிங்' வழிகாட்டி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

'காலைக்கதிர்' நாளிதழ், 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' இணைந்து, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை, சேலத்தில் நேற்று நடத்தின.

அதில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது: நடப்பாண்டு கவுன்சிலிங்கில், 22,763 சீட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதில், 17,324 சீட்கள், கணினி அறிவியல் தொடர்பானவை. கல்லுாரியில் சேரும் முன், அக்கல்லுாரி தேர்ச்சி விகிதத்தை பார்க்க வேண்டும். தன்னாட்சி கல்லுாரியாக இருந்தால் நேரில் சென்று தரத்தை ஆராய வேண்டும்.

தகுதியான, திறமையான ஆசிரியர்கள் இருக்கும் கல்லுாரிகள்தான், வேலைவாய்ப்புக்கு திறன்களை உருவாக்க முடியும். நல்ல, 'பிளேஸ்மென்ட்' தரும் கல்லுாரியே சிறந்தது. அதிலும் அதிக சம்பளத்துக்கு செல்ல வேண்டும் எனில் நீங்கள்தான் நன்றாக படிக்க வேண்டும். இன்ஜினியரிங்கில் முதல் இரு ஆண்டுகளில், அடிப்படையை நன்றாக படித்துவிட்டு வேலைவாய்ப்புக்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் ஸ்ரீராம் பேசியதாவது: இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிக்க, மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. 85 சதவீத வேலைவாய்ப்பை தரும் ஐ.டி., தொழில்துறையில், இரு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் லேசான தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் கல்லுாரிகள், நவீன மாற்றங்களை புரிந்து பாடத்திட்டத்தை மாற்றி, வேலைவாய்ப்பு திறனை வழங்குவதால், நல்ல கல்லுாரிகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்னையில்லை.

எதிர்காலத்தில் உருவாகப்போகும் வேலைக்குத்தான் படிக்கப்போகிறோம். அதற்கு முதல், 3 ஆண்டுகளில், நேர்காணலில் தேர்ச்சி பெறும்படி தயார் செய்ய வேண்டும். 4ம் ஆண்டு 'இன்டர்ன்ஷிப், பிராஜக்ட்' என கற்றல் இருந்தால் வேலைவாய்ப்பு பெறுவதில் பிரச்னை இருக்காது.இவ்வாறு அவர் பேசினார்.

சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் சக்தி வேல் பேசியதாவது: ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் அனைத்தும் தெளிவாக, மாணவர் சேர்க்கை இணையதள பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதை கொண்டு விருப்பத்தேர்வை நீங்களே செய்ய வேண்டும். இதற்கு கடந்த ஆண்டு கட் - ஆப் மதிப்பெண்கள், தர வரிசைப்பட்டியல் உதவியாக இருக்கும். யுசர் ஐ.டி., - பாஸ்வேர்ட் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது.

உங்கள் சுற்று கவுன்சிலிங் தொடங்குவதற்கு முதல்நாள், 'சீட் மேட்ரிக்ஸ்' எனும் காலியிட விபரங்கள் வெளியிடப்படும். அதை கொண்டு விருப்பதேர்வு பட்டியல் தயாரித்து வைத்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். சீட் கிடைத்த பின் கல்லுாரி அல்லது டி.எப்.சி., மையங்களில் சான்றிதழ்களை கொடுத்து, 'அட்மிஷன்' போடுவது அவசியம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கோவை கற்பகம் இன்ஸ்டியூசன்ஸ் பி.ஆர்.ஓ., ஆதிபாண்டியன் பேசுகையில், ''ஒரே பெயரில் பல கல்லுாரிகள் உள்ளன. அதனால், 'கல்லுாரி கோடு' என தரப்பட்டிருக்கும் எண்களை கவனித்து, விருப்பத்தேர்வை தயாரிக்க வேண்டும். ஆற்றல், அறிவு, திறமை, அர்ப்பணிப்பு திறன் உள்ள மாணவர்கள், நல்ல கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் கல்லுாரிகளை தேடித்தான் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வரும்,'' என்றார்.

கோவை ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் சம்பத்குமார் பேசுகையில், ''நாட்டை கட்டமைக்க இன்ஜினியரிங் படித்தவர்கள் தேவை. அதேநேரம் இன்ஜினியரிங் படித்தால் வீட்டின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும். இப்படிப்பை செய்முறையாக கற்க வேண்டும். மனப்பாடம் செய்து படிப்பதில் பிரயோஜனம் இல்லை. இதை கற்றுத்தரும் திறமையான ஆசிரியர்கள், 'லேப்' வசதி ஆகியவற்றை கொண்ட கல்லுாரிகளை தேர்வு செய்வது அவசியம்,'' என்றார்.

ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பாலசுப்ரமணியம் பேசுகையில், ''நெல் மூட்டை விலையை விட அரிசியாக மாற்றும்போது விலை அதிகரிக்கும். அதேபோல் சாதம், பிரியாணி என மதிப்பு கூட்டும்போது மேலும் விலை அதிகரிக்கும். அதுபோல் மாணவர்களாகிய உங்களை மதிப்பு கூட்டப்பட்டவராக மாற்றும் பணியை கல்லுாரிகள் செய்ய வேண்டும்,'' என்றார்.

இந்நிகழ்ச்சியை, கோவை கற்பகம் கல்வி குழுமம், ஸ்ரீஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரி ஆகியவை இணைந்து வழங்கின. மேலும் ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோருடன் பங்கேற்றனர். அவர்களுக்கு தேவையான சந்தேகங்களை, நிகழ்ச்சியில் கேட்டு தெளிவு பெற்றனர். 'கட் - ஆப் மதிப்பெண் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது'

'ஏராளமான தகவல்கள்'

கணினி அறிவியல் படிக்க முடிவு செய்துள்ளேன். படிக்கும்போது கற்க வேண்டியவை, 'கேட்' தேர்வுக்கு தயாராவதால் கிடைக்கும் பலன், வேலைவாய்ப்பு திறன் அதிகரிக்க செய்ய வேண்டியவை என ஏராளமான தகவல்கள், இந்த வழிகாட்டியில் கிடைத்தன.ஆர்.இனியா, பனமரத்துப்பட்டி

'பதற்றம் போய்விட்டது'

என் மகன் ரமணனுடன், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டன. இதனால் அதுகுறித்த சந்தேகம், பதற்றம் காணாமல் போய்விட்டது. மாணவர்களை விடவும், பெற்றோருக்கு உதவியாக இருந்தது. கே.பழனிவேல், சேலம்

'அஸ்வின் கருத்து அருமை'

அஸ்வின் கூறிய கருத்துகள் அருமை. கணினி அறிவியல் அல்லது இ.சி.இ., எடுத்து படிக்க முடிவு செய்துள்ளேன். இன்ஜினியரிங் படிக்கும்போது, என்னென்ன செய்யக்கூடாது என்றும், என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.எஸ்.ஸ்ரீகிருஷ்ணா, குகை, சேலம்.

'அச்சத்தை போக்கியது'

கவுன்சிலிங்கில் பங்கேற்பது குறித்து மாணவர்களை விட, பெற்றோருக்கு பதற்றம் உள்ளது. ஏதும் தவறு செய்து குழந்தை எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இருந்தது. அதை சுத்தமாக போக்கிவிட்டது இந்நிகழ்ச்சி.ஆர்.சத்யா, பனமரத்துப்பட்டி.

'அடுத்தாண்டும் பங்கேற்பேன்'

இப்போதுதான் பிளஸ் 2 படிக்கிறேன். இன்ஜினியரிங் படிக்க போவதை முடிவு செய்ததால், இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். 'கட் - ஆப்' மதிப்பெண் எவ்வளவு, முக்கியம் என்பதை, இந்நிகழ்ச்சி உணர்த்தியது. அடுத்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பேன்.எஸ்.டி.அர்ஜூன், சேலம்,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us