ADDED : ஜூன் 24, 2024 01:58 AM
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே வெள்ளா மருச்சுக்கட்டியில் சேதமடைந்த சிமென்ட் கூரை சீட் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இதனால் குழந்தைகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வெள்ளா மருச்சுக்கட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் படிக்கின்றனர். 2 முதல் 4 வயது உள்ள குழந்தைகள் வரும் நிலையில் சேதமடைந்த கூரை விரிசலுடன் காணப்படும் சிமென்ட் சீட்டில் வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர்.பல ஆண்டுகளாக கூரை சேதம் அடைந்து விரிசலுடன் உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்து சுவர் முழுவதும் ஈரமாகிறது.இதனால் பொருட்களை வைப்பதற்கும் பாதுகாப்பாற்ற நிலை உள்ளது. பெற்றோர் கூறியதாவது: சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தை அகற்றுவதற்கு முன் தளவாடப் பொருள்கள், அங்கன்வாடி பொருள்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், தற்காலிகமாக இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.