ADDED : ஜூன் 18, 2024 06:09 AM
சிக்கல் : சிக்கல் ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப் பகுதியாக விளங்கும் சிக்கலுக்கு நாள்தோறும் ஏராளமான கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த ஓராண்டாக வியாழக்கிழமை தோறும் சிக்கல் நகரில் வாரச்சந்தை நடக்கிறது. வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க மற்றும் விற்பனை செய்ய சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர்.
இந்நிலையில் சிக்கல் நகருக்கு வரும் மக்களுக்கு உரிய முறையில் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் கண்மாய் கரையோரம் ஊருணி மற்றும் விளைநிலங்களில் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதற்கு செல்கின்றனர். பெண்கள் மற்றும் முதியவர்கள் கழிப்பறை வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
எனவே கடலாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் ஒன்றிணைந்து அத்தியாவசிய தேவையாக உள்ள கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
கட்டப்படும் கழிப்பறைகளை முறையாக பராமரித்து குறைந்த கட்டணம் வசூலித்தால் ஊராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் தரக்கூடியதாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.