Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நத்தம் நிலங்களை விற்க முடியாமல் நீடிக்கும் சிக்கல்! 11 மாதமாக பத்திரப்பதிவில் தொடர்கிறது

நத்தம் நிலங்களை விற்க முடியாமல் நீடிக்கும் சிக்கல்! 11 மாதமாக பத்திரப்பதிவில் தொடர்கிறது

நத்தம் நிலங்களை விற்க முடியாமல் நீடிக்கும் சிக்கல்! 11 மாதமாக பத்திரப்பதிவில் தொடர்கிறது

நத்தம் நிலங்களை விற்க முடியாமல் நீடிக்கும் சிக்கல்! 11 மாதமாக பத்திரப்பதிவில் தொடர்கிறது

ADDED : ஜன 03, 2024 11:30 PM


Google News
அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில், நத்தம் வகைப்பாடு நிலத்தை வாங்கவோ, விற்கவோ, அடமானம் செய்யவோ முடியாமல், 11 மாதங்களாக மக்கள் தவிக்கின்றனர்.

அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்தின் கீழ் அன்னுார், மோப்பிரிபாளையம் பேரூராட்சிகள் மற்றும் 21 ஊராட்சிகள் உள்ளன. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.

11 மாதமாக...


ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், பவுண்டரிகள் அதிக அளவில் உள்ளன. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 20,000 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

புதிதாக 200க்கும் மேற்பட்ட 'லே-அவுட்'கள் அமைக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் கடந்த 11 மாதமாக நத்தம் வகைப்பாடு நிலங்களை கிரயம் செய்ய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து அன்னுார் சார் பதிவாளர் அலுவலக பத்திர எழுத்தர்கள் கூறியதாவது:

அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்தில், நிலம் கிரயம் பதிவு செய்தல், அடமானம் செய்தல், ஒப்பந்தம் பதிவு செய்தல் என தினமும் சராசரியாக 75 பத்திர பதிவு நடக்கிறது. முகூர்த்த நாட்களில் 150 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் வருமானம் பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு கிடைக்கிறது.

நிலம் பதிவு செய்ய தடை


இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலத்தை விற்பனை செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றபோது நத்தம் வகைப்பாடு நிலம் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என சார்பதிவாளர் தெரிவிக்கிறார். நத்தம் வகைப்பாட்டில் உள்ள இடத்தை அரசின் இணையதளத்தில் பார்க்கும்போது அரசு நிலம் பத்திரப்பதிவு செய்ய முடியாது என காண்பிக்கிறது. வருவாய்த்துறை மென்பொருள் மேம்பாடு செய்வதற்காக அரசு நிலங்களை பத்திரப்பதிவு செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. அதில் நத்தம் வகைப்பாடு நிலமும் சேர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய் துறை இணையதளங்கள் இணைந்து செயல்படுவதால் வருவாய்த் துறையின் தடையால் பத்திரப்பதிவுத் துறையிலும் நத்தம் வகை நிலம் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர். வேறு சில சார் பதிவாளர் அலுவலகங்களில் நத்தம் வகைப்பாடு நிலத்தை பத்திரப்பதிவு செய்கின்றனர். ஆனால் அன்னுாரில் மட்டும் செய்ய மறுக்கின்றனர். அரசு உடனடியாக நத்தம் வகை நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு பத்திர எழுத்தர்கள் தெரிவித்தனர்.

பொது மக்கள் அதிருப்தி

இது குறித்து பொது மக்கள் கூறுகையில், நத்தத்தில் உள்ள வீட்டில் ஏற்கனவே வங்கி கடன் பெற்று சரியாக செலுத்தி வந்து விரிவாக்க கடனுக்கு விண்ணப்பித்தாலும் அதற்கும் அடமானம் செய்ய சார் பதிவாளர் அலுவலகத்தில் மறுக்கின்றனர். வங்கியில் கடன் பெற முடியவில்லை. வீட்டில் சுப காரியங்களுக்காக நிலத்தை விற்க முடியவில்லை. 11 மாதங்களாக அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறோம் என்று அதிருப்தி தெரிவிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us