18.4 கோடி பயனாளிகளின் 'பாஸ்வேர்டு' தகவல் திருட்டு
18.4 கோடி பயனாளிகளின் 'பாஸ்வேர்டு' தகவல் திருட்டு
18.4 கோடி பயனாளிகளின் 'பாஸ்வேர்டு' தகவல் திருட்டு
ADDED : மே 29, 2025 01:12 AM

புதுடில்லி: இணையதளங்கள், சமூக வலை தளங்களை பயன்படுத்தும், 18.4 கோடி பயனாளிகளின் 'பாஸ்வேர்டு' உள்ளிட்ட விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு, ஒவ்வொருவரும் ஒரு பயனாளர் கணக்கு பெயர், அதற்குள் நுழைவதற்கான பாஸ்வேர்டு எனப்படும் கடவுச் சொல்லை பயன்படுத்துவர்.
சைபர் திருடர்கள் இது போன்ற தகவல்களை திருடி, அதில் இருந்து அந்த பயனாளியின் விபரங்களை சேகரித்து, வங்கிக் கணக்கில் இருந்து திருடும் குற்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இந்நிலையில், சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஜெரீமியா பவுலர் என்பவர், அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இணையதளம் ஒன்றில், 18.4 கோடி பயனாளர்களின் பெயர்கள், கடவுச் சொற்கள் அடங்கிய கோப்பு கிடைத்துள்ளது. இணைய திருடர்கள் இந்த தகவல்களை திருடி, எவரும் பார்க்கக் கூடிய வகையில், ஒரு தொகுப்பாக உருவாக்கியுள்ளனர்.
ஆனால், யார் இந்தத் தகவல்களை திருடினர், திருடப்பட்ட பயனாளர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இ-மெயில், பல இணையதள மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான இந்த பயனாளர் விபரம் மற்றும் அதன் பாஸ்வேர்டு அதில் இடம்பெற்றுள்ளன.
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற தளங்களைத் தவிர, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளத்துக்கான தகவல்களும் இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை தவிர, அரசு தளங்களில் நுழைவதற்கான தகவல்கள், சுகாதார தளங்கள், வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கணக்கு தொடர்பான தகவல்களும் இந்தத் தொகுப்பில் உள்ளன.
இந்தத் தகவல்கள் அனைத்தும், ஒரு டெக்ஸ்ட் பைலாக உள்ளது. இவை மோசடிகாரர்களிடம் சிக்கினால், பெரும் சைபர் பொருளாதார குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
தகவல் திருட்டு மென்பொருள் பயன்படுத்தி இவை திருடப்பட்டிருக்கலாம். இது போன்ற மோசடிகாரர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள, பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றுவது, மிகவும் கடினமான மற்றும் வித்தியாசமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
அதுபோல பல தளங்களை பயன்படுத்தும்போது, ஒரே மாதிரியான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.