ADDED : ஜூன் 12, 2025 07:52 AM
ஊட்டி; நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே உள்ள நெடுகல்கம்பை பழங்குடியின கிராமத்தில், 2016ம் ஆண்டு நக்சல் இயக்கத்தை சார்ந்த சுந்தரி, சாவித்ரி, டேனிஸ் உட்பட, 7 பேர் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தனர்.
அப்போது, அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கினர். இச்சம்பவம் தொடர்பாக கொலக்கம்பை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கில், 5வது குற்றவாளியான சந்தோஷ்,32, கேரள மாநிலம், திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று நீலகிரி மாவட்ட கியூ பிரிவு போலீசார், சந்தோஷை கேரள சிறையிலிருந்து அழைத்து வந்து, ஊட்டியில் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விசாரணையின்போது, சந்தோஷை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க, போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும், 18ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். போலீசார் சந்தோஷை மீண்டும் கேரள சிறைக்கு கொண்டு சென்றனர்.