ADDED : ஜூலை 08, 2024 06:45 PM

குன்னுார்:நாடு முழுவதும் கடந்த, 5 மாதங்களில், 26.36 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் கொல்கத்தாவில் உள்ள, இந்திய தேயிலை வாரிய புள்ளி விபரப்படி, நாடு முழுவதும் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது. நடப்பாண்டின் முதல், 5 மாதங்களில், 26.36 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே, 5 மாதங்களில், 32.20 கோடி கிலோ தேயிலை உற்பத்தி இருந்தது. இதனை ஒப்பிடும் போது, கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 5.83 கோடி கிலோ உற்பத்தி குறைந்துள்ளது.
அதில், வட மாநிலங்களில் மட்டும் உற்பத்தி, 18.84 கோடி கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டு, 23.70 கோடி கிலோ உற்பத்தி செய்ப்பட்டது. இதனை ஒப்பிடும் போது, 4.86 கோடி கிலோ குறைந்துள்ளது.
தென் மாநிலங்களில் நடப்பாண்டு, 5 மாதங்களில் 7.52 கோடி கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டு, 8.50 கோடி கிலோ உற்பத்தியானது. 98 லட்சம் கிலோ குறைந்தது.
தமிழகத்தில் நடப்பாண்டு, 5.28 கோடி கிலோ உற்பத்தியானது. கடந்த ஆண்டு, 5.76 கோடி கிலோ உற்பத்தி இருந்தது. 48 லட்சம் கிலோ குறைந்தது.
எனினும், தென் மாநில தேயிலை துாளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், சராசரி விலை உயர்ந்து வருகிறது. வட மாநிலங்களில் அதிக வெப்பம் மற்றும் பெரும் மழை என மாறுபட்ட காலநிலையால் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட அனைத்து இடங்களிலும் உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள்; வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.