Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா?

பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா?

பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா?

பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா?

ADDED : ஜூலை 08, 2024 05:45 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மேட்டுப்பாளையம்: -கோவை-நீலகிரி மாவட்ட எல்லையில், பில்லூர் வனப்பகுதியில், பவானி ஆற்றின் குறுக்கே, பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த 1961ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1966ல் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த அணை கடல் மட்டத்திலிருந்து, 1387 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. அணையின் கொள்ளளவு 1,280 மில்லியன் கன அடி (1.568 டி.எம்.சி.), அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு நலன்கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவிக்கப்படும். இந்த அணை கோவை மாவட்டம் காரமடையிலிருந்து 50 கிலோமீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது.

பில்லூர் அணை இரண்டு மலைகளுக்கு இடையே, 1170 அடி நீளத்திலும், 21 அடி அகலத்திலும், பேஸ் மட்டத்திலிருந்து, 261 அடி உயரத்திலும் கட்டப்பட்டுள்ளது. 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றி, மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இரண்டு மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது அல்லாமல் பில்லூர் அணை நிரம்பி வழியும் போது, அணைக்கு வருகின்ற தண்ணீரை பவானி ஆற்றில் வெளியேற்ற, நான்கு மதகுகள் கட்டப்பட்டுள்ளன.

முயற்சி தோல்வி


நீலகிரி மாவட்டத்தில் ஒரு பகுதியும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, மன்னார்காடு தாலுகா ஆகிய பகுதிகளில், 460 சதுர மைல் பரப்பளவு, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாகும். இந்த அணை கட்டி, 58 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் அணையை துார் வாருவதற்கு 1991ம் ஆண்டு முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

அணை கட்டி 58 ஆண்டுகள் துார் வாரப்படாததால் மழைக்காலங்களில் வரும் வெள்ள நீரில், மரங்கள், சேரும், சகதியும் அடித்து வருகின்றன. இதனால் தற்போது அணையில், 57 அடிக்கு சேரும், சகதியும் நிறைந்திருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அணையின் மொத்த உயரமான 100 அடியில் 57 அடி உயரத்துக்கு சேரும், சகதியும் கலந்த வண்டல் மண் நிறைந்திருப்பதால் அணையின் மொத்த கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதனால் தற்போது 43 அடி உயரத்துக்கு அதாவது அணையின் பாதியளவுக்கு குறைவாகவே தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது.

இதன் காரணமாக பில்லுார் அணையை நம்பியுள்ள கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்க முடியவில்லை. எனவே அணையை எப்படியாவது துார் வாரியே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு கோவை மாநகராட்சி தள்ளப்பட்டது.

டிரெஜ்ஜர் இயந்திரம்


பில்லுார் அணையில் தண்ணீர் வற்றிய பிறகு துார் வாரலாம் என்றால் ஒரு ஆண்டில் பெரும்பாலான நாட்களில் பில்லுார் அணையில் நீர் நிரம்பி இருக்கும். இதனால் தண்ணீர் வற்றிய பின்னர் துார் வாரலாம் என்ற முடிவு கைவிடப்பட்டது. அடுத்த கட்டமாக அணையில் தண்ணீர் இருக்கும்போதே துார் வாரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அணையை பராமரித்து வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முடிவு செய்தது. இதற்காக ஆறு மற்றும் கடல் முகத்துவாரங்களில் துார் வாரும் டிரெஜ்ஜர் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அந்த இயந்திரம் துார்வாரி எடுக்கும் மண்ணை குழாய் வாயிலாக கொண்டு வந்து கரையில் கொட்டப்படும். ஆனால் கடல் மட்டத்திலிருந்து 1387 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் துார் வாரப்படும் வண்டல் மண்ணை தரைப்பகுதிக்கு கொண்டு வருவது சவாலான விஷயமாகும்.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அணை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட இயக்குனர் சந்திரமோகன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அணைகளில் துார் வாருவதற்கான முதல் நடவடிக்கையாக பில்லுார் அணையில் துார் வாரப்பட உள்ளது. அணையில் துார் வாரவேண்டுமென்றால் அதில் தண்ணீர் இல்லாத காலங்களில் பொக்லைன் கொண்டு மண்ணை எடுத்து லாரியில் ஏற்றி செல்லும் பழைய முறைதான் நடைமுறையில் உள்ளது. ஆனால் பில்லுார் அணையில் அத்தகைய பழைய முறையில் அல்லாமல் இந்தியாவிலேயே முதன்முறையாக ஜியோ டியுப் தொழில்நுட்பத்தில் துார் வாரப்பட உள்ளது.

ஜியோ டியூப்


உலக வங்கி நிதி உதவியுடன் பில்லுார் அணையில் எவ்வளவு வண்டல் மண் இருக்கிறது என்று பாத் மெட்ரீக் மற்றும் டோபோ கிராபிக்கல் சர்வே என்ற அளவீட்டு ஆய்வு மற்றும் நிலவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2 கோடியே 60 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகள் இணைந்து இந்த திட்டத்தில் பங்கு கொண்டுள்ளன. பில்லுார் அணையில் துார் வாருவது என்பது ஆறும், கடலும் சேரும் இடமான முகத்துவாரங்களை ஆழப்படுத்துவதற்காக டிரெஜ்ஜர் என்று சொல்லப்படும் இயந்திரம் வாயிலாக துார் வாரப்படும். இந்த முறையில் துார் வாரி எடுக்கப்படும் மண் கரையில் கொண்டு வந்து குழாய் வாயிலாக கொட்டப்படும்.

ஆனால் பில்லுார் அணையில் துார் வாரி எடுக்கப்படும் மண்ணை மலைப்பகுதியில் கொட்ட முடியாது என்பது தான் நம் முன்பு உள்ள சவாலான விஷயம். துார் வாரி எடுக்கப்படும் மண்ணை லாரி வாயிலாக மலைப்பகுதியில் இருந்து வனப்பகுதியில் உள்ள சாலைகள் வழியாக கொண்டு வருவது தான் ஒரே வழி.

52 லட்சம் முறை


பில்லுார் அணையில் 2 கோடியே 60 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு லாரியில் அதிகபட்சம் 5 கனமீட்டர் மண் தான் எடுத்து வர முடியும். அதன்படி பார்த்தால் பில்லுார் அணையில் உள்ள 2 கோடியே 60 லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை தரைப்பகுதிக்கு எடுத்து வர 52 லட்சம் லாரிகள் வேண்டும். அதாவது 52 லட்சம் முறை லாரிகள் பில்லுார் அணைக்கு வனப்பகுதியில் உள்ள சாலைகள் வழியாக மேலும், கீழும் சென்று எடுத்து வரவேண்டும், இத்தனை முறை வனப்பகுதிக்குள் லாரிகள் செல்ல வனத்துறை அனுமதி அளிக்காது. அப்படியே அனுமதி அளித்தாலும் லாரிகள் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் வன விலங்குகளுக்கு மட்டும் அல்லாமல் பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது தவிர அணையில் துார் வாரிய மண்ணை எடுத்து எங்கே கொண்டு போய் கொட்டி வைப்பது என்பதும் மற்றொரு பெரிய பிரச்னை. அவ்வளவு பெரிய இடம் அணை அருகே கிடையாது. அணைக்கு கீழேயும் அவ்வளவு பெரிய இடம் கிடையாது.

முதன்முறை


எனவே இந்த மெகா திட்டத்தின் முதல் கட்டமாக 25 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண்ணை மட்டும் ஜியோ டியுப் தொழில்நுட்பத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டிரெஜ்ஜர் இயந்திரத்தின் வாயிலாக அணையின் அடிப்பகுதியில் ஆழப்படுத்தி வண்டல் மண் எடுக்கப்படும். ஆனால் அந்த மண்ணை அணையிலிருந்து கீழே கொண்டு வராமல் ஜியோ டியுப் என்ற மெகா சைஸ் டியுப்களில் நிரப்பப்படும். இத்தகைய ஜியோ டியுப் தொழில்நுட்பம் தண்ணீரில் இருந்து மண்ணை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. கடலில் பாலம் கட்டும் போது இத்தகைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அணையில் துார் வாருவதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக கேரளாவிலிருந்து டிரெஜ்ஜர் துார் வாரும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த இயந்திரத்தை முழுவதுமாக கொண்டு வர முடியாது என்பதால் அதை பல்வேறு பாகங்களாக பிரித்து கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட டிரெய்லர் லாரிகளில் ஏற்றி பில்லுார் அணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் ஒன்றாக சேர்க்கப்பட்டு பில்லுார் அணையில் மிதந்தவாறே துார் வாரப்படும். துார் வாரும் போது தண்ணீரும், வண்டல் மண்ணும் சேர்ந்து தான் எடுக்கப்படும்.

கரை பலப்படுத்தப்படும்


பின்னர் அவற்றிலிருந்து தண்ணீர் மட்டும் பிரிக்கப்பட்டு அணையிலேயே மீண்டும் தண்ணீர் விடப்படும். ஆனால் மண் மட்டும் பில்லுார் அணையின் கரையோரங்களில் வைக்கப்பட்டுள்ள ஜியோ டியுப்களில் சேகரிக்கப்படும். அந்த மண் அங்கேயே வைக்கப்பட்டு அணையில் கரை பலப்படுத்தப்படும். அவற்றில் புல் மற்றும் செடிகள், மரங்கள் வளர்ந்து அதுவே அணையில் கரையை பலப்படுத்தும் பாதுகாப்பு அரணாக நாளடைவில் மாறி விடும். மேலும் அந்த மண் மீண்டும் தண்ணீரில் கரைந்து அணைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பாக ஜியோ டியுப்பில் வைக்கப்படும்.

2 கோடியே 60 லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை ஜியோ டியுப் தொழில்நுட்பம் வாயிலாக துார் வார முடியுமா என்பதை தெரிந்து கொள்வதற்கான பைலட் திட்டம் தான் இது. இது வெற்றி அடைந்தால் மொத்தம் உள்ள வண்டல் மண்ணும் துார் வாரப்படும். 25 ஆயிரம் கனமீட்டர் மண் துார் வாரப்பட்ட பின்னர் நிபுணர் குழு பரிந்துரைக்கும் முடிவின்படி இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us