சாலையோரம் முகாமிட்ட யானை தோழர்கள்
சாலையோரம் முகாமிட்ட யானை தோழர்கள்
சாலையோரம் முகாமிட்ட யானை தோழர்கள்
ADDED : ஜூன் 03, 2024 12:45 AM

பந்தலுார்;'பந்தலுார் அருகே சாலையோரம் முகாமிட்ட யானை தோழர்களின் அருகே யாரும் செல்ல கூடாது,'என, வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் ஒரு ஆண் யானை மற்றும் மறறொரு ஆண் யானை இணைந்து தோழர்களாக, பல்வேறு இடங்களிலும் சுற்றி திரிகின்றன.
பந்தலூர் பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விவசாய பயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்திய இந்த யானைகள் இரண்டும், சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ளன.
நேற்று முன்தினம் மாலை அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பின்பகுதியில் உள்ள புதரில் முகாமிட்டிருந்த இரண்டு யானைகளும், திடீரென கொளப்பள்ளி- சுல்தான் பத்தேரி சாலையில் இறங்கி நின்றன.
இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், சுகாதார நிலையத்திற்கு வந்த நோயாளிகளும் அச்சம் அடைந்தனர்.
தேயிலை தோட்டத்தில் முகாம்
பின்னர் சாலையின் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் இறங்கிய இரண்டு யானைகளும், அங்கேயே முகாமிட்டன. பின்னர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அருகில் இருந்த தேயிலை தோட்டம் மற்றும் காபி தோட்டங்கள் வழியாக, நடந்துச்சென்று இரவு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'இந்த இரண்டு யானைகளும் பகல் நேரங்களில் மக்கள் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் உலா வருவதால், வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் அச்சத்துடன் வெளியில் நடமாட வேண்டியநிலை ஏற்பட்டு உள்ளது.
எனினும், இந்த இரண்டு யானைகளும் ஒன்றாக சேர்ந்து தோழர்களாக உலா வருவதை, பார்க்க நன்றாக உள்ளது,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'இந்த யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளதால், போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்காக அருகில் செல்ல வேண்டாம். யானைகள் தாக்கும் ஆபத்து உள்ளது,' என்றனர்.