ADDED : ஜூன் 02, 2025 06:46 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பழையபாளையத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. கடந்தாண்டு கொல்லிமலையில் பெய்த கனமழையால், இந்த ஏரி நிரம்பியது. இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தி, சிவநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், முத்துக்காப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது.
3ம் போகமாக கடந்த மாசி மாதம், ஏரியின் கடைமடை பகுதி விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.
பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிரை அறுவடை செய்தனர். ஆனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வயலில் சாய்ந்ததுடன், மழைநீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து, முத்துக்காப்பட்டி விவசாயிகள் கூறுகையில், 'மாசி மாத துவக்கத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் மழைக்கு சிக்காமல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மாத கடைசியில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான போது, மழையில் சாய்ந்தது. இதனால், அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.