செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 04, 2024 11:36 AM
காளியம்மன் கோவிலில் தீமிதி விழா
குண்டத்து ஓம்காளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியில் உள்ள குண்டத்து ஓம் காளியம்மன் கோவில் திருவிழா கடந்த டிச., 19ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா, நேற்று அதிகாலையில் துவங்கியது. கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர். பலரும் கை குழந்தையுடன் தீ மிதித்தனர். தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மனவளக்கலை மன்றம் சார்பில் கருத்தரங்கு
உலக அமைதி வேள்வி தினத்தையொட்டி, நேற்று முன்தினம் சேந்தமங்கலம் அறிவு திருக்கோவிலில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் கருத்தரங்கு நடந்தது. தலைவர் ராஜாமணி, பேராசிரியர் ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சேலம் மண்டல மனவளக்கலை மன்ற துணைத்தலைவர்
கந்தசாமி, சேலம், நாமக்கல் மாவட்ட முன்னாள் டி.இ.ஓ., உதயகுமார் ஆகியோர் பேசினர். இதில், 'செயல் விளைவு' என்ற தலைப்பில் பெண்கள், 'டிவி' சீரியல்
பார்ப்பதால் குடும்பத்தில் எதிர்மறை அதிகரித்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
மனவளக்கலை மன்றம் மூலம் மனதை கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து, 9 ஆண்டு தவப்
பயிற்சி செய்தால் சர்க்கரை நோய், இருதய நோய், புற்று நோய் உள்ளிட்ட நோய்களின் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி, உடற்பயிற்சி, தீயான பயிற்சி, காய கல்பம், அகத்தாய்வு உள்ளிட்ட பயிற்சிகளை கற்றுக்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
பரமத்தியில் குட்கா விற்ற
இரு கடைகளுக்கு 'சீல்'
பரமத்தி டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், சில தினங்களுக்கு முன் பரமத்தி போலீசார் டீ கடை, பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கடைகளில், 'குட்கா' பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, பரமத்தி எஸ்.ஐ., சரண்யா மற்றும் பரமத்தி போலீசார், குட்கா விற்ற இரண்டு கடைகளுக்கு, நேற்று, 'சீல்' வைத்தனர். குட்கா விற்ற இரு கடைகளும், குறைந்தபட்சம், 21 நாட்களுக்கு கடைதிறக்க அனுமதியில்லை என, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.
ரூ.1.80 லட்சத்திற்கு
பருத்தி வர்த்தகம்
மல்லசமுத்திரம் கிளையில் நடந்த பருத்தி ஏலத்தில், 1.80 லட்சம் வர்த்தகம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி
யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில், பி.டி., ரகம், 6,030 ரூபாய் முதல், 7,275 ரூபாய் வரையிலும், சுரபி ரகம், 6,340 ரூபாய் முதல், 7,330 ரூபாய் வரையிலும், கொட்டு பருத்தி, 3,380 ரூபாய் முதல், 4,980 ரூபாய் வரையிலும் விற்பனையானது. 80 மூட்டை பருத்தி, 1.80 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. அடுத்த ஏலம் வரும், 10ல் நடக்கிறது என, கிளை மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
4 ஆண்டாக திறக்காத
ரேஷன் கடை
காவக்காரப்பட்டி பஞ்., வைத்தியநாதபுரத்தில், 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் ரேஷன் கடையை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி யூனியன், காவக்காரப்பட்டி பஞ்., வைத்தியநாதபுரம் கிராமத்தில், கடந்த, 2018ல் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது வரை இந்த ரேஷன் கடை திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பணம் வீணானதுடன், பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. எனவே, பொது மக்களின் நலன் கருதி, நான்காண்டுகளாக பூட்டி கிடக்கும் இந்த ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
குறுகிய சாலையில் கட்டப்பட்டு வந்த
நிழற்கூட கட்டுமான பணி நிறுத்தம்
பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் பகுதியில் சாலையின் குறுகிய இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக, விபத்து ஏற்படும் வகையில் கட்டப்பட்டு வந்த நிழற்கூடத்தின் கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சாமி கூறியதாவது:
பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் பகுதியில் சாலையின் குறுகிய இடத்தில் நிழற்கூட கட்டுமானப்பணி நடந்து வந்தது. இந்த நிழற்கூட பகுதியில் ஒரு பஸ் நின்றால், பின்னால் வரும் எந்த வாகனமும் செல்ல முடியாது. முன்னாள் இருக்கும் வாகனம் சென்றால் தான், மற்ற வாகனம் செல்ல முடியும், அந்தளவுக்கு சாலை குறுகியதாக காணப்படுகிறது. மேலும், வளைவு பகுதியாக உள்ளதால், எதிரே வரும் வாகனம் தெரியாது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, நிழற்கூடத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் என, கலெக்டரிடம் கடந்த மாதம் கோரிக்கை வைத்தோம். இதையடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பின், நிழற்கூடம் வேறு இடத்தில் மாற்றியமைப்பது அல்லது இருக்கும் இடத்திலேயே சற்று உள்ளே தள்ளி அமைப்பது என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், தற்போது நடந்து வந்த நிழற்கூட கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மரவள்ளி விலை நிர்ணயம்
நாளை முத்தரப்பு கூட்டம்
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், தங்களது கோரிக்கையை ஏற்றும், கலெக்டரின் அறிவுரைப்படியும், மரவள்ளி சாகுபடி முன்னோடி விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள் மற்றும் சேகோசர்வ் உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அரசு அலுவலர்களை கொண்ட முத்தரப்பு கூட்டம், நாளை மாலை, 5:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னோடி மரவள்ளி விவசாயிகள், சேகோ ஆலை உரிமையாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு, மரவள்ளி விலை நிர்ணயம் மற்றும் மரவள்ளி தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்து சமய பேரவை சார்பில்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
ஆன்மிக இந்து சமய பேரவை திருப்பாவை குழு சார்பில், நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் கையில் விளக்கேந்தி, மலைக்கோட்டையை வளம் வந்து சுவாமியை வழிபாடு செய்வர். 53ம் ஆண்டாக நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தற்போது பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இரண்டாம் ஆண்டாக, நேற்று அரங்கநாதர் கோவில் படிவசால் அருகே நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் பண்டியன் தலைமை வகித்தார். பொருளாளர் கோபி முன்னிலை வகித்தார். டாக்டர்கள் மல்லிகா,
அழகம்மாள் பங்கேற்று, 30 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தனர்.
கிரிக்கெட் லீக் போட்டி
வெற்றி பெற்ற அணிக்கு பரிசு
ஆங்கில புத்தாண்டையொட்டி, சேந்தமங்கலத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், சேந்தமங்கலம், அண்ணாநகர், காரவள்ளி, காளப்பநாயக்கன்பட்டி, பச்சுடையாம்பட்டி, ஆர்.பி.புதுார் பகுதியை சேர்ந்த, 16 அணி வீரர்கள் பங்கேற்றனர். இறுதி போட்டியில், என்.பி.சி.சி., - பி.சி.சி., - சி.சி.சி., - கே.எம்.சி.சி., ஆகிய, 4 அணிகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை, கோப்பை வழங்கும் விழா, சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், 4 அணி வீரர்களுக்கு கோப்பை வழங்கி பாராட்டினார். அப்போது, ''கொல்லிமலையில் விரைவில் சமுதாய மாநாடு நடத்தப்பட உள்ளது. அப்போதும், கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும்,'' என்றார்.
நிலத்தடி நீர் விஷமாக மாறியதாக புகார்
எருமப்பட்டி அருகே, தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் விஷத்தன்மையாக மாறியுள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எருமப்பட்டி யூனியன், காவக்காரப்பட்டி பஞ்., 6வது வார்டில் இயங்கிவரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் உள்ள பஞ்., ஆழ்துளை கிணற்று தண்ணீர் விஷத்தன்மையாக மாறியுள்ளது. மேலும், விவசாயிகளின் கிணறு ஆகியவை கெமிக்கல் நீராக மாறி அப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கு குடிநீர் இல்லாமலும் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட ரசாயன தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேஸ்ட் காட்டன் குடோனில் தீ விபத்து
திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி சாலை, ஜோதி தியேட்டர் பின்புறம், சக்திவேல் என்பவருக்கு சொந்தமான, வேஸ்ட் காட்டன் குடோன் உள்ளது. நேற்று காலை, 9:00 மணிக்கு, வழக்கம் போல் வேலைக்கு வந்த பணியாளர்கள், தரம் பிரிக்க இரண்டு மூட்டைகளை வெளியே எடுத்து வைத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குடோனுக்குள் திடீரென புகை வந்துள்ளது. மளமளவென பரவி தீ குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது. தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில், குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. அவற்றின் மதிப்பு, 7 லட்சம் ரூபாய். சம்பவம் தொடர்பாக, திருச்செங்கோடு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.