/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ அரிசி ஆலையை மூடக்கோரி மயானத்தில் போராட்டம் அரிசி ஆலையை மூடக்கோரி மயானத்தில் போராட்டம்
அரிசி ஆலையை மூடக்கோரி மயானத்தில் போராட்டம்
அரிசி ஆலையை மூடக்கோரி மயானத்தில் போராட்டம்
அரிசி ஆலையை மூடக்கோரி மயானத்தில் போராட்டம்
ADDED : ஜூலை 22, 2024 01:06 AM
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே நவீன அரிசி ஆலையை மூடக்கோரி, கிராம மக்கள் மயானத்தில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை 1981 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இந்த அரிசி ஆலைக்கு கொண்டு வரப்படுகின்றன. நெல்லை அவியல் செய்து, அரிசியாக்கிய பிறகு, குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேஷன் கடைகள் வாயிலாக பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 100 டன் நெல் வரை அரைக்கப்பட்டு வந்த இந்த ஆலையில், தற்போது 40 டன் மட்டுமே அரைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நெல்லை அரைக்கும் போது உமி துகள்கள் கரி துகள்களாக மாறி அந்தப் பகுதி முழுவதும் காற்றில் பறப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கும்பகோணம்- மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளான சித்தர்காடு, மாப்படுகை, சோழம்பேட்டை, மூவலூர் உள்ளிட்ட கிராமங்களில் கரி துகள்கள் பறப்பதால், வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நவீன அரிசி ஆலை மூடக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் தொடுத்த வழக்கில் 2010ம் ஆண்டில் நவீன அரிசி ஆலை மூடுவது குறித்து ஆய்வு செய்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் தொடர்ந்து ஆலை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கிராம மக்கள் நேற்று மாயானத்தில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக சித்தர்காடு மயானத்தில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சதீஷ், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ்ஒளி, மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து மாலை 7:45 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.