/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இந்நாள் போல எந்நாளும் இருக்குமா பைபாஸ் ரோடு முதல்வரால் கிடைத்த தீர்வு நிரந்தரமாகுமா இந்நாள் போல எந்நாளும் இருக்குமா பைபாஸ் ரோடு முதல்வரால் கிடைத்த தீர்வு நிரந்தரமாகுமா
இந்நாள் போல எந்நாளும் இருக்குமா பைபாஸ் ரோடு முதல்வரால் கிடைத்த தீர்வு நிரந்தரமாகுமா
இந்நாள் போல எந்நாளும் இருக்குமா பைபாஸ் ரோடு முதல்வரால் கிடைத்த தீர்வு நிரந்தரமாகுமா
இந்நாள் போல எந்நாளும் இருக்குமா பைபாஸ் ரோடு முதல்வரால் கிடைத்த தீர்வு நிரந்தரமாகுமா
ADDED : மே 30, 2025 03:54 AM

மதுரை: 'முதல்வர் ஸ்டாலின் வருகையால் புதுப்பொலிவு பெற்ற பைபாஸ் ரோட்டில் இதேநிலை நிரந்தரமாக தொடர வேண்டும்' என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது பழங்காநத்தம் முதல் பாத்திமா கல்லுாரி வரையான பைபாஸ் ரோடு. நகரின் விரிவாக்கத்தால் இன்று பிரதான ரோடாக மாறி நெரிசலிலும், ஆக்கிரமிப்பிலும் சிக்கித் தவிக்கிறது. இதில் தள்ளுவண்டி, நடைபாதைக் கடைகள் ஏராளமாக ஆக்கிரமித்துள்ளன. வெள்ளிக் கிழமை வாரச்சந்தை சர்வீஸ் ரோட்டின் ஒருபுறம் நடப்பதால் வாகன போக்குவரத்துக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
ரோடு பராமரிப்பின்றி பள்ளங்களுடன் காட்சியளித்தன. இந்நிலையில் நாளை (மே 31) முதல்வர் ஸ்டாலின் மதுரை வருவதையொட்டி இந்த ரோடு புதுப்பொலிவு பெற்றுள்ளது. முதல்வர் இந்த ரோடு வழியாக 'ரோடு ஷோ' நடத்த உள்ளார். இருபுறமும் பொதுமக்கள், கட்சியினர் நின்று வரவேற்கின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
இதில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணிகளை துரிதமாக செயல்படுத்த முடிவு செய்தனர். அதன்படி இந்த ரோட்டில் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களை கொண்டு மண்குவியலை அகற்றினர். நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டில் 'பேட்ச் ஒர்க்' பணிகளை மேற்கொண்டனர். கண்டு கொள்ளப்படாத ரயில்வே மேம்பாலத்தில் பெயின்ட் அடித்து, கம்பிகள், கைப்பிடிகளை ஒழுங்குபடுத்தினர். நடைபாதை கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
தினமும் நெரிசலில் தவிக்கும் பைபாஸ் ரோடு, 'திருஷ்டிபடும்' அளவு பளிச்சிடுகிறது. இதேநிலை தினமும் தொடர்ந்தால் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தை மக்கள் பாராட்டுவர். முதல்வரால் கிடைத்த நிம்மதி தொடருமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.