ADDED : செப் 04, 2025 05:03 AM

மதுரை: மதுரை கோட்ட ரயில்வே அலுவலக வளாகத்தில், டி.ஆர்.இ.யு., தொழிற்சங்கம் சார்பில் வருவாய்க்கேற்ப போனஸை உயர்த்தி வழங்க செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடந்த நிதியாண்டில் சரக்குப் போக்குவரத்தில் ரூ.ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 302 கோடி, பயணிகள் போக்குவரத்தில் ரூ.75 ஆயிரத்து 239 கோடி என ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் கோடி வருவாய் ரயில்வேக்கு கிடைத்துள்ளது. ஆனால் 2011 முதல் 78 நாட்களை கணக்கிட்டு மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.
விலைவாசி உயர்ந்த நிலையில் 2014 முதல் பழைய ஊதியக்குழுவின் அடிப்படையில் ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. உற்பத்தி வருவாய்க்கு ஏற்பபோனஸ் தொகையை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு கணக்கிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கோட்டத் தலைவர் ராஜூ, உதவி கோட்டத் தலைவர் ஜெயராஜசேகர், துணைச் செயலாளர் ஜெயராமன், ஓபன் லைன் உதவிச் செயலாளர் சீனிவாசன், ஓடும் தொழிலாளர் சங்க நிர்வாகி காமராஜ், டி.ஆர்.பி.யு., கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன் பேசினர்.