குப்பை தொட்டியான பனையூர் கால்வாய்
குப்பை தொட்டியான பனையூர் கால்வாய்
குப்பை தொட்டியான பனையூர் கால்வாய்
ADDED : மார் 23, 2025 04:07 AM

மதுரை : மதுரை புதுராமநாதபுரம் ரோடு பனையூர் கால்வாய் அப்பகுதி மக்களின் குப்பைத்தொட்டியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாலதண்டாயுதபாணி கோயில் எதிரே நரசிம்மபுரம் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி நுழைவு வாயிலில் பனையூர் கால்வாய் செல்கிறது.
சிம்மக்கல் அருகே வைகை தென்கரையில் துவங்கி நெல்பேட்டை, முனிச்சாலை, புதுராமநாதபுரம் ரோடு வழியாக செல்கிறது.
வைகையில் தண்ணீர் திறக்கப்படும் போது இக்கால்வாய் மூலம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பப்பட்டது. இந்நிலையில் குடியிருப்பு பகுதி கழிவுநீர், குப்பை உள்ளிட்டவை இதில் சேர்வதால் அசுத்தம் நிறைந்து கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
அப்பகுதியினர் கூறியதாவது: இக்கால்வாயில் குடியிருப்புகளின் கழிவுநீர் கலக்கப்படுவதுடன் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையை வீசுவதால் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அபிராமி தியேட்டர் சந்து பாலத்தின் கைப்பிடிச் சுவர் இடிக்கப்பட்டு மண் அள்ளும் இயந்திரம் மூலம் கால்வாயில் தேங்கிய குப்பை அகற்றப்பட்டது. அதேசமயம் போதிய இடமின்றி அவற்றை நீக்க வழியின்றி உள்ளது.
இதனால் மாலையில் கொசு கடியால் அவதிப்படுவதுடன் பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கால்வாயில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும் என்றனர்.