ADDED : மார் 23, 2025 04:09 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் உத்தப்பநாயக்கனுார், கல்லுாத்து, பெருமாள்பட்டி, மேட்டுப்பட்டி, வகுரணி, கள்ளபட்டி கிராமப் பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை, பன்னீர் ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் பயிரிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தால் பூக்களின் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு பூக்களின் வரத்து கூடியுள்ளது. திருவிழாக்கள் குறைந்துள்ளதால் பூக்களின் விலையும் குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் கிலோ ரூ. 250 வரை விலை கிடைத்த பன்னீர் ரோஜா கிலோ ரூ. 20ஆக விலை குறைந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ. 250 முதல் ரூ. 500 வரை விலை போகிறது.
இதில் பன்னீர் ரோஜா கிலோ ரூ. 20 க்கு விற்பனையாவதால், தோட்டத்தில் பூக்களை பறிப்பவர்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களில் ரோஜா பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.