/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் கல்லுாரி மாணவர்களுக்கு வந்த சோதனை; காமராஜ் பல்கலை 'ஆமை வேக' நிர்வாகத்துக்கு 'சான்று'மதுரையில் கல்லுாரி மாணவர்களுக்கு வந்த சோதனை; காமராஜ் பல்கலை 'ஆமை வேக' நிர்வாகத்துக்கு 'சான்று'
மதுரையில் கல்லுாரி மாணவர்களுக்கு வந்த சோதனை; காமராஜ் பல்கலை 'ஆமை வேக' நிர்வாகத்துக்கு 'சான்று'
மதுரையில் கல்லுாரி மாணவர்களுக்கு வந்த சோதனை; காமராஜ் பல்கலை 'ஆமை வேக' நிர்வாகத்துக்கு 'சான்று'
மதுரையில் கல்லுாரி மாணவர்களுக்கு வந்த சோதனை; காமராஜ் பல்கலை 'ஆமை வேக' நிர்வாகத்துக்கு 'சான்று'
ADDED : ஜூன் 17, 2024 01:07 AM

மதுரை : தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளில் 2024 ஏப்ரல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில் இணைவிப்பு பெற்ற கல்லுாரிகளில் இத்தேர்வு மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பி.ஜி., படிப்புகளில் சேர்வது பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பல்கலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகள் இணைவிப்பு பெற்று நடக்கின்றன. இவற்றில் தன்னாட்சி பெறாத கல்லுாரிகளில் யு.ஜி., படிப்புகளுக்கான 2024 ஏப்ரல் பருவத் தேர்வுகள் ஜூன் 4 ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக ஜூன் 15க்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் அப்போதும் தேர்வு நடக்காமல், ஜூன் 22ல் நடக்கும் என பல்கலை அறிவித்துள்ளது. இதுபோல் பி.ஜி.,யில் எம்.பி.ஏ., மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 18 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு தற்போது ஜூலை 1க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மதுரையில் உள்ள அரசு மற்றும் அனைத்து தன்னாட்சி கல்லுாரிகளில் 2024 ஏப்ரல் பருவத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டது. சில கல்லுாரிகளில் மதிப்பெண் சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
ஏப்ரல் தேர்வு நடக்காததால், பல்கலை இணைவிப்பு பெற்று தன்னாட்சி பெறாத கல்லுாரிகளில் யு.ஜி., இறுதியாண்டு மாணவர்கள் பி.ஜி., படிப்புகளில் சேர்வது கேள்விக்குறியாக மாறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் கூறுகையில், ஜூன் 4 ஓட்டு எண்ணிக்கை, ஜூன் 15 யு.பி.எஸ்.சி., தேர்வு காரணமாக தன்னாட்சி பெறாத கல்லுாரிகளில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 22ல் தேர்வு நடத்தி ஜூலை 7 ல் முடிவை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
பேராசிரியர்கள் கூறியதாவது: பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. தேர்வாணையர், டீன், இயக்குநர் உட்பட பல்கலை உயர் பதவிகள் அனைத்திலும் துறை பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். அவர்களால் துறை பணிகளுடன், நிர்வாக பணிகளை சரியாக மேற்கொள்ள முடியவில்லை.
குறிப்பாக, மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பருவத் தேர்வுகள் நடத்துவதில் பல்கலை அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதுகுறித்து கல்லுாரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையிலான பல்கலை கன்வீனர் கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மதுரையில் உள்ள அரசு மற்றும் அனைத்து தன்னாட்சி கல்லுாரிகளில் 2024 ஏப்ரல் பருவத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டது.