ADDED : செப் 11, 2025 05:13 AM

நுாலின் பெயர் : விட்டு விடுதலையாகி...
ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி
வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட்
டோல்ப்ரீ : 1800 425 7700 / (Insert Whatsapp Logo) 75500 09565
பக்கம் : 260 விலை : ரூ. 360
அன்பும் , கருணையும் மரணிக்காதவரை இந்த மண்ணில் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்கிறது விட்டு விடுதலையாகி...
சகலத்தையும் இழந்த உறவில்லா அனாதைகளின் அன்பு பரிமாறுதல்களின் அழகான அரங்கேற்றம் இது.
மரணத்தை விடவும் கொடியது நம்மால் நேசிக்கப்படுபவர்களின் மரணம்தான். கணவன் மற்றும் குழந்தைகளை மொத்தமாக பறிகொடுத்த கொடூரத்தின் வலியைத் தாங்க முடியாமல் வெறுப்போடு தன் சாவிற்காகக் காத்திருக்கும் சுவாதியின் மனப்போரட்டங்களில் இருந்து கதை தொடங்குகிறது.
எட்டு வயதில் தன் பெற்றோரை இழந்து இருபது வருடங்களாகத் தனியாக வாழ்ந்து வரும் பாலா உள்ளே நுழையும்போது கதை சூடு பிடிக்கிறது.
நட்டாற்றில் தவித்துக் கொண்டிருந்த சுவாதியின் கையைப் பிடித்து கனிவான வார்த்தைகள் மூலமும் பச்சைப்புடவைக்காரியின் கருணை மூலமும் அவளைக் கரை சேர்த்த கதையை உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி.
கண்ணதாசனின் கவிதைகள் கதையின் ஒரு பாத்திரமாகவே அமைந்திருப்பது இந்த நுாலின் சிறப்பு அம்சம்.
மக்களிடையே அவ்வளவாகப் பிரபலமாகாத கவியரசரின் கவிதைகளை கதைக்கேற்றபடி அனாயாசமாகக் கையாண்டு ஜகஜ்ஜால வித்தை காட்டியிருக்கிறார் நுாலாசிரியர்.
கந்தல் துணியின் கவிதையில் வாழ்வியல் உண்மையையும், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும், அதோ அந்த பறவை பாடலில் சுதந்திரத்தின் துள்ளலையும், பாலும் பழமும் திரைப்பத்தில் வரும் அடித்தாலும் உதைத்தாலும் நான் உந்தன் பிள்ளை என்ற பாடல் வரிகளில் இறைவிக்கும் நமக்குமான உறவின் ஆழத்தையும் சொல்லும் முறை ரொம்பவே வித்தியாசமான உத்தி.
காதலில் பக்தியும் பக்தியில் காதலும் கனியும் அற்புதமான இடங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.. 'வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது' என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை விளக்கும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.
கதைக்குள் கதைகளாக மலரும் கதைகளும் கவிதைகளும் எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்கள்.
பிரேம் - பிரியா காதல் ஜோடிகள் மூலம் பசி, மூப்பு, இறப்பு என வாழும் மனிதனுக்கும் எப்போதும் பரிபூரண ஆனந்த நிலையில் இருக்கும் இறைவனுக்குமிடையேயான தொடர்பை மிக நுட்பமாக உணர வைத்திருக்கிறார் நுாலாசிரியர்.
'மருத்துவம் பொறியியல், கணக்கு மாதிரி விஷயங்கள வேகமாக் கத்துக்கலாம். ஆனா ஆன்மிகத்த, அதாவது மனசுல அன்ப வளர்த்துக்கற பயிற்சிய அவசரப்படுத்தவே முடியாது. சில பேர் அதை ஒரே மாசத்துல முடிப்பாங்க. சிலருக்கு ஒன்பதாயிரம் பிறவிகள் தேவைப்படும்.
'புலியையும் பாம்பையும் கூட செல்லப்பிராணிகளாக வளர்த்து விடலாம். ஆனால் அன்பை வளர்த்துக்கொள்வது அதைவிடக் கடினமான காரியம்.'
இவை போன்ற வார்த்தை வெடிப்புகள் கதை முழுவதும் விரவி அன்பின் வீரியத்தை அற்புதமாக உணர்த்துகின்றன.
நாயகியும் நாயகனும் சாதாரண மனிதர்களாக இருக்கும் நிலையிலேயே தெய்வீகக் காதல் எப்படி இருக்கும் என்று நமக்குச் செய்முறை விளக்கம் கொடுக்கிறார்கள்.
துக்கத்தை துக்கத்தால் வெல்லும் இந்தக் கதையின் ஒவ்வொரு வரியிலும் மிதமிஞ்சியிருப்பது அன்புதான்.
சில கதைகள் மனதை வெல்லும். இன்னும் சில காலத்தை வெல்லும். விட்டு விடுதலையாகி நம் மனதையும் காலத்தையும் ஒரு சேர வெல்கிறது.
நம்மால் மரணத்தை வெல்ல முடியாது. ஆனால் நெருங்கியவர்களின் மரணம் ஏற்படுத்தும் வலியையும் வேதனையையும் அன்பால் வெல்ல முடியும் என்ற அற்புதமான சூத்திரத்தை சுவாதி - பாலாவின் காதல் நமக்குச் சொல்லித் தருகிறது.
படிப்பவர்களின் மனங்கள் அன்பால் நிரம்பி வழிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எழுதப்பட்ட விட்டு விடுதலையாகி... வரலொட்டி ரெங்கசாமியின் ரசிகர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
...
சுமித்ரா தேவி
...