/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காவலாளி கொலை: சி.பி.ஐ., இறுதி அறிக்கை நிராகரிப்பு காவலாளி கொலை: சி.பி.ஐ., இறுதி அறிக்கை நிராகரிப்பு
காவலாளி கொலை: சி.பி.ஐ., இறுதி அறிக்கை நிராகரிப்பு
காவலாளி கொலை: சி.பி.ஐ., இறுதி அறிக்கை நிராகரிப்பு
காவலாளி கொலை: சி.பி.ஐ., இறுதி அறிக்கை நிராகரிப்பு
ADDED : செப் 02, 2025 05:37 AM
மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்த இறுதி அறிக்கையில் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு கூறி, மதுரை நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவிலில், பேராசிரியை நிகிதா காரில் நகை திருடுபோனதாக அளிக்கப்பட்ட புகாரில், கோவில் காவலாளி அஜித்குமாரை ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் தாக்கியதில்அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.
இந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு, 'நகை திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகாரையும் சேர்த்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.
'சி.பி.ஐ., விசாரணை அதிகாரி ஆக., 20க்குள் கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
ஆக., 20ல் விசாரணையின் போது, சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா, ''போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை முடித்து, மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆக., 20ல் ஆன்லைன் மூலம் முதற்கட்ட இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
''இவ்வழக்கில் ஏற்கனவே ஐந்து போலீசார் கைதாகியுள்ளனர். போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் ஆறாவது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்,'' என்றார்.
நீதிபதிகள், 'சி.பி.ஐ., விசாரணை அதிகாரி டி.எஸ்.பி., மோஹித்குமார் மற்றும் அவரது குழுவிலுள்ள அதிகாரிகளை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. நகை திருட்டு வழக்கில் விசாரணையை துவக்கி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.
இந்நிலையில், முதற்கட்ட இறுதி அறிக்கையில் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுமாறு திருப்பி அனுப்ப, மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார்.