/உள்ளூர் செய்திகள்/மதுரை/விடியல் தருமா 2024: மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் எதிர்பார்ப்புவிடியல் தருமா 2024: மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் எதிர்பார்ப்பு
விடியல் தருமா 2024: மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் எதிர்பார்ப்பு
விடியல் தருமா 2024: மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் எதிர்பார்ப்பு
விடியல் தருமா 2024: மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 01, 2024 05:36 AM

மதுரை; மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவில் அரசியல், அதிகாரிகள் பின்னணியில் நேர்மையான அதிகாரிகள் ஓரம் கட்டப்படுவதும், 'துதிபாடி' அதிகாரிகளுக்கு 'பசை'யான பணிகள் வழங்கும் 'உள்ளடி வேலை'களுக்கு 2024 ஆண்டாவது விடியல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மக்களுக்கு பாதாளச் சாக்கடை உடைப்பு, குடிநீர் குழாய் இணைப்பில் கழிவு நீர் கலப்பது, ரோடுகள் வசதிகள் கிடைப்பது பெரும் சவாலாகவே உள்ளது. இப்பணிகளை கண்காணிப்பது பொறியியல் பிரிவு. சென்னையை அடுத்து 100 வார்டுகள் கொண்ட பெரிய மாநகராட்சியாக உள்ள மதுரைக்கு, இரண்டு வார்டுகளுக்கு ஒரு உதவிப் பொறியாளர் (ஏ.இ.,) அல்லது இளநிலை பொறியாளர் (ஜெ.இ.,) இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது 21 ஏ.இ.,க்கள், 9 ஜே.இ.,க்களே உள்ளனர். ஏ.இ.,க்கள் கூடுதல் பொறுப்பாக 4 டெக்னிக்கல் அசிஸ்ட்டென்ட்டுகளும், 17 தேர்ச்சி திறனற்ற அலுவலர்களும் கவனிக்கின்றனர். இதில் பலர் டிப்ளமோ படித்தவர்கள். இவர்களிடமிருந்து முக்கியமான பணிகளில் தரத்தை எதிர்பார்க்க முடியுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
உள்ளடி அரசியல்:
பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு கமிஷனர் வெள்ளி தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இதில் தற்போது புதிய ரோடுகள் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆனாலும் துரிதமாக நடக்கவில்லை. மக்களிடம் மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாநகராட்சியில் நடக்கும் 'உள்ளடி அரசியல்' என்கின்றனர், நேர்மை அலுவலர்கள்.
அவர்கள் கூறியதாவது:
ஒரு பொறியாளர் அதிகபட்சம் 4 வார்டுகளுக்கு கூட பொறுப்பு வகிக்கிறார். இவர்கள் பணிச்சுமை என வெளியில் கூறிக்கொண்டாலும் அரசியல்வாதி, அதிகாரி பின்னணியில் தான் 4 வார்டுகளை பெற்றுள்ளனர்.
உதாரணமாக, மண்டலம் 1ல் உள்ள 21 வார்டுகளில் 2018 புதிய ரோடுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இவற்றை பொறியாளர்கள்தான் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள 7 பொறியாளர்களில், மூன்று பேருக்கு மட்டும் 1304 ரோடுகள் அமைக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 714 ரோடுகள் 4 பேருக்கு பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மண்டலம் 2ல் உள்ள வார்டுகளுக்கு 528 புதிய ரோடுகளில், ஒருவருக்கு மட்டும் 118, மற்றொருவருக்கு 91 ரோடுகள் என ஒதுக்கப்பட்டுள்ளன. ரோடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப 'பசை'யும் அதிகம் கிடைக்கும் என்பதால் 'துதிபாடி' அதிகாரிகளுக்கு இதுபோல் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இதனால் பணிகள் தரமில்லாமல், மாதக்கணக்கில் தாமதமாகி பிரச்னை எழுகின்றன.
இந்த 'துதிபாடி அதிகாரிகள்' கலாசாரம் அ.தி.மு.க., தி.மு.க., என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாறுவதில்லை. அதேநேரம் ரெகுலர் பொறியாளருக்கு ஒரு வார்டும், தேர்ச்சித் திறன் 2வது பட்டியலில் உள்ள பணியாளருக்கு ஏ.இ., கூடுதல் பொறுப்பு வழங்கி 4 வார்டுகளும் ஒதுக்கிய கூத்தும் நடக்கிறது.
எனவே அரசியல், அதிகாரிகள் பின்னணி பார்க்காமல் திறமையான அதிகாரிகளுக்கு உரிய பொறுப்பு வழங்கினால் பணிகள் விரைவாக நடக்கும். கமிஷனர் மதுபாலன் மாநகராட்சியில் நடக்கும் 'உள்ளடி அரசியலுக்கு' முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர்.