அரசு குடியிருப்பு சேதம்: மூவர் கைது
அரசு குடியிருப்பு சேதம்: மூவர் கைது
அரசு குடியிருப்பு சேதம்: மூவர் கைது
ADDED : பிப் 12, 2024 05:15 AM

மதுரை: மதுரையில் அரசு குடியிருப்புகளில் கண்ணாடி, கதவு உள்ளிட்டவற்றை போதையில் உடைத்து நொறுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆத்திக்குளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மத்திய அரசின் யோஜனா திட்டத்தில் ரூ. 30 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த நவம்பரில் திறக்கப்பட்டது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன. பிப்.1ல் இக்குடியிருப்புகளின் ஜன்னல், கண்ணாடி, கதவு உள்ளிட்டவற்றை போதையில் சிலர் அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்த போது அச்சம்பவம் தொடர்பான எடுத்த வீடியோ காட்சிகள் வெளியானது. அதனை அப்பகுதி மக்கள் போலீசிலும் ஒப்படைத்தனர்.
இதனடிப்படையில் புதுாரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்த முத்து மணிகண்டன், அவனியாபுரம் வல்லரசு ஆகியோர் கஞ்சா போதையில் உடைத்து சேதப்படுத்தியது உறுதியானது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.