ADDED : ஜூன் 22, 2024 05:30 AM
மதுரை: 'இந்தாண்டுக்கான தோட்டக்கலைத் துறை மானியங்களுக்கு விவசாயிகள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்' என தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் ஊடுபயிராக காய்கறி சாகுபடி செய்தல், தென்னை, அவுரி, பாரம்பரிய காய்கறிகள் பரப்பு விரிவாக்கம், காளான் வளர்ப்பு குடில், நகர்ப்புறத்தில் வீட்டுத்தோட்டம், செங்குத்து தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் முருங்கை சாகுபடி, வாழைக்கு முட்டுக்கொடுத்தல், பந்தல் காய்கறிகள் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும். பனை மேம்பாட்டுத் திட்டத்தில் பனங்கொட்டைகள் நடவு, பனைமரக்கன்றுகளுக்கு மானியம் வழங்கப்படும்.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் வீரிய ஒட்டுரக காய்கறிகள், அடர் நடவு மா, கொய்யா, மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, டிராகன், பேரீச்சை, விளாம்பழம், இலந்தை பயிர் சாகுபடி, தேனீ வளர்ப்பு, நிழல் வலைக்குடில், பறவை உட்புகா வலை, சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கிடங்கு, நடமாடும் விற்பனை வண்டி அமைக்க மானியம் வழங்கப்படும்.நுண்ணீர்ப் பாசன திட்டத்தில் சொட்டுநீர் பாசனம், தானியங்கி சொட்டுநீர் அமைக்க விரும்பினால் MIMIS இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
எஸ்.டபிள்யூ.எம்.ஏ., திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குறு வட்டங்களுக்கு ஆழ்துளை கிணறு, பிற வட்டங்களுக்கு நீர் சேமிப்பு மையம் அமைக்க மானியம் வழங்கப்படும். மானியம் தேவைப்படும் விவசாயிகள் tnhorticulture.tn.gov.in/tnhortnet இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.