/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புதிய பஸ்ஸ்டாண்டிற்குள் கழிப்பறை கட்ட எதிர்ப்பு புதிய பஸ்ஸ்டாண்டிற்குள் கழிப்பறை கட்ட எதிர்ப்பு
புதிய பஸ்ஸ்டாண்டிற்குள் கழிப்பறை கட்ட எதிர்ப்பு
புதிய பஸ்ஸ்டாண்டிற்குள் கழிப்பறை கட்ட எதிர்ப்பு
புதிய பஸ்ஸ்டாண்டிற்குள் கழிப்பறை கட்ட எதிர்ப்பு
ADDED : ஜூன் 23, 2024 04:16 AM

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் புதிதாக கட்டப்படும் பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில் கழிப்பறை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் சிதிலமடைந்ததால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.
இதையடுத்து தற்போது ரூ.4.90 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டும் பணிகள் நடக்கிறது. இப் பணிகள் முறையான திட்டமிடல் இன்றி நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர் சரவணன் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் கட்டும் இடத்தில் இதுவரை அரசுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கற்கள் ஊன்றவில்லை. பஸ் ஸ்டாண்ட் அமைப்பு குறித்த வரைபடம் வைக்கவில்லை. பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில் கட்டப்படும் வணிகவளாகத்திலேயே கழிப்பறையும் கட்டப்படுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும். வணிகவளாகம் பயன்படுத்த முடியாத அளவு சீர்கெடும். எனவே, கழிப்பறையை ஏற்கனவே உள்ளது போல் அதே வளாகத்தினுள் தனியாக கட்ட வேண்டும் என, கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.
பொறியாளர் கணேசன் கூறுகையில், வருவாய் துறையினருக்கு மனு கொடுத்துள்ளதால் அளவீடு கற்கள் ஊன்றப்படும். கழிப்பறையை மாற்றி அமைக்க உயரதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.