ADDED : ஜூலை 19, 2024 05:58 AM

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா ஜூலை 13ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான ஆடித்தேரோட்டம் ஜூலை 21 காலை 6:45 மணிக்கு மேல் நடக்கிறது. இந்த தேர் 5 நிலைகளுடன் கும்பம் வரை 51 அடி உயரம் கொண்டது. தேக்கு, வேங்கை மரத்தால் ஆனது. தேரின் கீழ்பகுதியில் 162 சுவாமி சிற்பங்களும் மேல் பகுதியில் 62 கலைச் சிற்பங்களுடன் மொத்தம் 400 சிற்பங்கள் வரை உள்ளன.
துணை கமிஷனர் கலைவாணன் கூறுகையில், ''பொதுப்பணித்துறையினரிடம் தேரின் நிலைத்தன்மைக்கான சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழாவுக்கான பாதுகாப்பு வசதி, வாகன நிறுத்தம், குடிநீர், கழிப்பறை வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேருக்கு புதிய வடம் மாற்றப்பட்டுள்ளது. இசம்புத்தடி (முட்டுக்கட்டை) தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளன'' என்றார்.