/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் தனி மாவட்டமாக உதயமாகுமா முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா? ஓசூர் தனி மாவட்டமாக உதயமாகுமா முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா?
ஓசூர் தனி மாவட்டமாக உதயமாகுமா முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா?
ஓசூர் தனி மாவட்டமாக உதயமாகுமா முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா?
ஓசூர் தனி மாவட்டமாக உதயமாகுமா முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா?
ADDED : செப் 11, 2025 01:12 AM
ஓசூர், ஓசூரை, தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்று ஓசூர் வரும், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதற்கான அறிவிப்பை வெளியிடுவாரா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், 5 லட்சத்து, 14,326 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், 29 சதவீதம் வனப்பகுதி. மாவட்டத்தில் மொத்தம், 10 ஒன்றியங்கள், 8 தாலுகா, 2 வருவாய் கோட்டங்கள், 29 உள் வட்டங்கள், 661 வருவாய் கிராமங்கள், 333 பஞ்.,க்கள் உள்ளன. குறிப்பாக, தமிழக - கர்நாடகா மாநில எல்லையிலுள்ள ஓசூர் பகுதி தான், மாவட்டத்தின் முக்கிய தொழில் நகராக உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள், 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஓசூர் மாநகராட்சி உள்ளதால், ஆண்டு வருமானம், 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.
வேகமாக வளரும் நகரம்
ஓசூரில், 2,000 ஏக்கரில் விமான நிலையம், கர்நாடகா - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை, ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்பாதை போன்றவற்றை கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரமாக ஓசூர் உள்ளது. அதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஓசூரை பிரித்து, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவை உள்ளடக்கிய தனி மாவட்டமாக அறிவிக்க, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சட்டசபையிலும் எம்.எல்.ஏ.,க்கள் பேசியுள்ளனர். ஆனால், வருவாய்த்துறையின் சாத்தியகூறுகள் இல்லை எனக்கூறி, பல ஆண்டுகளாக மாவட்டமாக அறிவிக்கவில்லை.
அறிவிப்பு வெளியாகுமா?
இந்நிலையில் கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., மாதம், ஓசூர் உட்பட, 8 தனி மாவட்டங்களை புதிதாக உருவாக்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,ராமச்சந்திரன் அறிவித்தார். அதனால், ஓசூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, ஓசூர் வரும் முதல்வர் ஸ்டாலின், ஓசூர் தனி மாவட்ட அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் மக்கள், தொழில்முனைவோர் உள்ளனர்.
ூ
வளர்ச்சிக்கு அவசிய தேவைமாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலுள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை தாலுகா மலை கிராம மக்கள், 3 பஸ்கள் மாறி, 120 கி.மீ., துாரம் பயணம் செய்து தான் செல்ல வேண்டியுள்ளது. ஓசூரை தனி மாவட்டமாக அறிவித்தால், மக்கள் வந்து செல்லும் கால நேரம் குறையும். மேலும், தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் ஓசூர் உள்ளதால் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
ஓசூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டால், மாநகராட்சியாக உள்ளதால், போலீஸ் கமிஷனர் அலுவலகம்
அல்லது மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அமைய அதிக வாய்ப்புள்ளது. அதனால், கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர். குற்ற செயல்களை குறைக்க முடியும். மேலும், ஓசூருக்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மாவட்டமாக மாற்றப்பட்டால், டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, நோயாளிகளுக்கான தரமான மருத்துவ சேவை கிடைக்கும். ஓசூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டால், அதன் கட்டமைப்புகளை காலதாமதமின்றி உடனடியாக செய்து விடலாம்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் மட்டும் கட்டினால் போதும். மீதமுள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. ஓசூரை தனி மாவட்டமாக அறிவித்தால், கூடுதல் நிதி கிடைக்கும். மேலும், தொழில் வளர்ச்சியில், ஓசூர் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்லும். அதிக நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வரும். மக்களுக்கு தேவையான வசதிகள் உடனுக்குடன் கிடைக்கும். எனவே, காலதாமதமின்றி, அறிவிப்பை வெளியிட, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.