Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளி மாணவனை கடத்தி கொன்ற இருவர் கைது; 'தாமத நடவடிக்கை' எனக் கூறி உறவினர்கள் மறியல்

பள்ளி மாணவனை கடத்தி கொன்ற இருவர் கைது; 'தாமத நடவடிக்கை' எனக் கூறி உறவினர்கள் மறியல்

பள்ளி மாணவனை கடத்தி கொன்ற இருவர் கைது; 'தாமத நடவடிக்கை' எனக் கூறி உறவினர்கள் மறியல்

பள்ளி மாணவனை கடத்தி கொன்ற இருவர் கைது; 'தாமத நடவடிக்கை' எனக் கூறி உறவினர்கள் மறியல்

ADDED : ஜூலை 04, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
அஞ்செட்டி,; அஞ்செட்டியில், பெண்ணுடன் தனிமையில் இருந்ததை பார்த்துவிட்ட பள்ளி மாணவரை, காரில் கடத்தி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில், புகார் அளித்தவுடன் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, அவர்களைத் தாக்கி, மாணவியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே, மாவனட்டி மலை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவராஜ், 45. இவரது மனைவி மஞ்சுளா, 37. இவர்களது மகன் ரோகித், 13; அப்பகுதி அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்தார்.

நேற்று முன்தினம், ரோகித் உடல்நலம் சரியில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை. மாலை, 4:00 மணியளவில், அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன், கிரிக்கெட் விளையாட சென்ற ரோகித், இரவு வீடு திரும்பவில்லை.

பெற்றோர் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர்.

ரோகித்தின் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 10:00 மணி முதல், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சு நடத்தி, அப்பகுதி, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிலர் மாணவனை காரில் கடத்திச் சென்றது தெரிந்தது.

இதற்கிடையே, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், திருமுடுக்கு கொண்டை ஊசி வளைவு அருகே கீழ்பள்ளம் வனப்பகுதியில், ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரித்த போது, அது மாயமான ரோகித் என, தெரிந்தது. போலீசார் சடலத்தை மீட்பதற்கு முன்பே, மாணவனின் உறவினர்கள் சடலத்தை மீட்டு, அஞ்செட்டி பஸ் ஸ்டாண்டிற்கு கொண்டு சென்று, மறியலை தொடர்ந்தனர்.

ரோகித் சடலத்தை எடுக்கக்கூடாது என்றும், போலீசாரிடம் புகார் கொடுத்த போதே தேடியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்றும் குற்றஞ்சாட்டினர்.

மேலும், மாணவன் மாயமானது குறித்து போலீசாரிடம் புகார் செய்த போது, 'அவன் என்ன கோடீஸ்வரன் வீட்டு பிள்ளையா?' என கேட்டதாகவும், அலட்சியமாக இருந்த போலீசார் மற்றும் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கூறி, மறியலை தொடர்ந்தனர்.

கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை, ஓசூர் ஏ.எஸ்.பி., அக் ஷய் அனில் வாகரே ஆகியோர் பேச்சு நடத்தினர்.

மாலை, 4:30 மணி வரை, மாணவன் சடலத்துடன் போராட்டம் நீடித்தது. அதனால், தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி - ஒகேனக்கல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், சடலத்தை மீட்ட போலீசார், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முன்னதாக, ரோகித் கொலையில், மாவனட்டியை சேர்ந்த மாதேவன், ௨௧, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக, போலீசாரிடம், மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மாதேவனின், 'சான்ட்ரோ' கார் ஒகேனக்கல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்தது.

அதையும் மாணவனின் உறவினர்கள் கண்டறிந்து தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் தான், போலீசார், மாவனட்டியை சேர்ந்த மாதேவனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையின் போது, அதே பகுதியை சேர்ந்த மாரப்பன் மகனான மற்றொரு மாதேவன் 21, என்பவருடன் சேர்ந்து ரோகித்தை கடத்தி கொலை செய்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆம்புலன்சில் மாணவன் சடலத்தை ஏற்றி, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். அப்போது, வாகனத்தின் கண்ணாடியை, மாணவனின் உறவினர்கள் உடைத்தனர்.

போலீசார் தடுத்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், போலீசாரையும் தாக்கினர்.

போலீசாரும் பதிலுக்கு தாக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட போலீசார் அஞ்செட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் என்ன?

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:புட்டண்ணன் மகன் மாதேவன், அப்பகுதியை சேர்ந்த, 20 வயது பெண்ணுடன் தனிமையில் இருந்ததை ரோகித் பார்த்துள்ளார். இதை வெளியே கூறினால் பிரச்னை என நினைத்த அவர், அப்பகுதியை சேர்ந்த நண்பரான மற்றொரு மாதேவன் உதவியுடன், மாணவன் ரோகித்திடம் லாவகமாக பேசி, சான்ட்ரோ காரில் கடத்தி சென்று, பீர் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். போதையில் மயங்கிய நிலைக்கு மாணவன் சென்ற பின், வாய், மூக்கை மூடி மூச்சுத்திணற செய்து, கொலை செய்துள்ளனர். பின்னர், திருமுடுக்கு கொண்டை ஊசி வளைவில் இருந்து, 50 அடி பள்ளத்தில் சடலத்தை வீசினர். கற்கள் மீது மாணவன் சடலம் விழுந்ததில், கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us